அறுபத்திஐந்து வயது அன்னை இன்று
அரங்க சூதாடடத்தில் பலியாடு!
அண்ணல் கண்ணன்வரும் வரைக்கும்
அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.
அரசியல்வாதிகள் அளக்கும் பேச்சில்
அடிக்கடி வருவது திருநாடு!
ஆயினும் மக்கள் வறுமைக்கோட்டில் அலைந்து
கையில் ஏந்துவதென்னவோ திருவோடு!
ஒருமைப்பாடு என்பது எல்லாம்
ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.
ஓசைபடாமல் சத்திய தர்மம்
ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!
வழிப்பறி கொள்ளை படுகொலைகள்
வீதி நடுவினில் மதுக்கடைகள்
அடிக்கடி நடக்கும் அராஜகங்கள்
அடியோடு புதையும் முழு நிஜங்கள்.
தர்மத்தலைமையை கைகேயியைப்போல்
துரத்தி் அனுப்புவர் வனவாசம்.
தாயே உன்னைக்காணக்கண்ணும் பனிக்கிறதே
இதுவா அம்மா உன் தேசம்?
ஊழல்செய்யும் பேர்களுக்கு
உற்சாகமாய் தருவர் பரிவட்டம்!
உண்மைபேசும் அப்பாவிகளோ
அழிந்தே போவார் தரைமட்டம்.
ஒடுங்கி அடங்கிக் கைகுவித்தே
ஒருநாள் கேட்பான் தன் ஓட்டு
பதவி கிடைத்த உடனேயே
பாவி வைப்பான் மக்களுக்கு வெடிவேட்டு.
பாவியைவிடவும் அப்பாவிதானே பொதுமக்கள்?
பொய்யைப்பேசி புரட்டு செய்பவர் தான் தலைமக்கள்!
நாக்கே வாயை விழுங்குவதா நகமே விரலைச்சுரண்டுவதா?
போக்கே சரியா தலைமையினில்
போய்க்கொண்டிருக்கிறதே நம் நாட்கள்!
ஏய்ப்பவர் அமரும் கோபுரத்தை
இடித்துதள்ள வேண்டும் ஓர் புறத்தில்.
மேய்ப்பவன் புலியாய் இருந்துவிட்டால்
மேயும் ஆடுகள் பலியாகும்
சிறுமைகளுக்கும் சில்லறைகளுக்கும்
சிறப்பு சேர்க்க விடுவோமா
பெருமைக்குணங்கள் கொண்ட பழம்
பெரும்தலைவர்வழியில் வாழ்வோமா!
தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
அரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!
ஏய்த்துப்பிழைக்கும் ஈனர்களை
சாத்தித்துரத்த இளைஞர் அணி
சடுதியில்வந்தால் நாட்டிற்கு
சட்டெனக்கிடைக்கும் பெருமை இனி!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.