0
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும்.


இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகாகக் கண்டு ரசிக்கலாம்.


 சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். பின்னர் மூடப்படும். இங்கு ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அங்கு செல்லும் தமிழக சுற்றுலாப் பயணிகளில் பலரும், அந்த படம் இங்கு எடுக்கப்பட்டது, இந்த பாடல் காட்சி இங்குதான் எடுத்துள்ளார்கள் என்ற வசனத்தை தவறாமல் கூறுவார்கள்.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொட்ட பெட்டா மலைக்கு கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும், பெட்டா என்றால் மலை என்றும் கன்னடத்தில் பொருள் கூறுவர். அதன் அடிப்படையிலேயே இந்த பெரிய மலைக்கு தொட்டபெட்டா என்று பெயர் வந்துள்ளது.


ஆனால், இந்த மலை சங்க காலத்தில் தோட்டி மலை என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இந்த மலையின் பெயர் நளிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊட்டியில் இருந்து சாலை வழியாக தொட்ட பெட்டா செல்லலாம். போகும் வழி எங்கும் பச்சை பசேலென்று இயற்கைக் காட்சிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். தொட்ட பெட்டா மலையின் ஒரு பகுதி வரையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன் பிறகு சற்று குறுகலான பாதையில் நடந்து செல்ல வேண்டும்.


தொட்ட பெட்டா மலையில் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேப்போல, தொட்ட பெட்டா மலையின் மீதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சுற்றுலா செல்ல உகந்த காலங்களாகும்.


அங்கிருந்து இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இரண்டு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் முழு அழகையும் இந்த தொலைநோக்கிகள் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சுற்றுலா சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 4000 பேர் வரை இந்த தொலைநோக்கி வழியாக நீலகிரியை கண்டு களிப்பார்கள் .


தொட்டபெட்டா சிகரத்தின் மேல் ஒரு அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளும், இளசுகளும் பார்த்து மகிழ ஏற்ற இடமாக அது உள்ளது. புகைப்பட பிரியர்களுக்கு ஏற்ற இடமும் கூட.


வாகனத்தில் இருந்து இறங்கி நடக்கும் பாதையில் சில கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. பச்சைக் காய்கறி முதல் சூடான பஜ்ஜி வரை அங்கு கிடைக்கின்றன.


குளிர் காலங்களில் ஊட்டியை விட இங்கு மிக அதிகமாக குளிர் நிலவுகிறது. எனவே, இங்கு கால நேரத்தில் சுற்றுலா செல்ல புறப்படுவோர் மறக்காமல் சுவெட்டரைக் கொண்டு செல்வது நல்லது.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top