0
டைட்டில் தான் ''தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்''. ஆனால், நகுல், தினேஷ் உடன் படத்தில் கால் டாக்ஸி டிரைவராக வரும் 'காமெடி' சதீஷையும் சேர்த்து 3 ஹீரோக்கள்! தலைப்பிலேயே இது ஏதோ கைப்பேசி சம்பந்தப்பட்ட கதை என்பது புரிந்தாலும் கூடவே கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் காமெடி, நிறைய ரொமான்ஸ், அதையும் தாண்டி சயின்ஸ்... என பியித்து டெபலெடுக்க முயன்று அதில் பாதி வெற்றியும், பாதி தோல்வியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா! அது எப்படி? இதோ பார்ப்போம்...!

கதைப்படி, ஹீரோ நகுலுக்கு., கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் எழுதி சமர்பிக்க வேண்டிய புதிய கண்டுபிடிப்பு புராஜக்ட் நோட்டுகளை தான் எழுதி கொடுத்து 'துட்டு' பார்க்கும் கேரக்டர்! அப்படி ஹீரோயின் ஐஸ்வர்யா தத்தா 'அண்ட் கோ' மாணவர்களுக்கு, நகுல் எழுதி கொடுத்த ''இயற்கை சீற்ற சூழலிலும் சிக்கல் இல்லாத செல்போன் சிக்னல்...'' பற்றிய புராஜக்ட், பிரபல செல்போன் கம்பெனியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு இக்கட்டான சூழலில் அந்த புராஜக்ட்டை செயல் வடிவத்திற்கு கொண்டு வர அக்கல்லூரி மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். உடன் நகுலின் உதவியை நாடும் அந்த மாணவர்களுக்கும், தன் காதலிக்கும், நகுல் எவ்வாறு உதவுகிறார் எனும் கதையுடன், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி விற்பனை பிரதிநிதியாக வரும் ''அட்டகத்தி'' தினேஷ் - பிந்து மாதவியின் காதலையும், கல்யாணத்திற்கு பெண் தேடி சலித்து போகும் கால்டாக்ஸி டிரைவர் சதீஷின் வாழ்க்கையையும் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வௌிவந்திருக்கும் படம் தான் ''தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்!''

ஒரு ஹீரோ நகுல் - இளம் விஞ்ஞானி வஸந்தாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பின்நாளில் காதலியாகும் கல்லூரி மாணவி ஹரிணி எனும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு தரும் புராஜக்ட் பேப்பரில் எழுத்துக்கள் தெரியா வண்ணம் எழுதி தந்து, அதில் ஒரு கெமிக்கலை தௌித்ததும் எழுத்துக்கள் பளிச்சிட வைப்பதில் தொடங்கி, தனது சோலார் பவர் பைக் மூலம் சூரிய புயலில் செயல் இழக்கும் செல்போன் டவரை உயிர்பிக்க செய்வது வரை ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன.?, அடுத்து என்ன...? என ஆவலை தூண்டும்படி நடித்திருக்கிறார்.

புதிது புதிதாக பிளாட் புரமோட் செய்யும் பில்டிங் கன்ஸ்டரக்ஷ்ன் கம்பெனி ரெப்பாக வரும் தினேஷ், ''கழுத்துல டை, கையில் பை, வாயில் பொய்...'' எனும் ரீதியில் இஷ்டத்துக்கு அடித்துவிட்டு... புதிய பிளாட்டுகளை விற்பனை செய்யும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்கொலை செய்து கொள்ள முயன்றவர் இவர், என தவறாக இவருக்கு வகுப்பு எடுக்கும் பிந்து மாதவியை டாவடிக்கும் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார் தினேஷ்! தினேஷ் மாதிரியே அவரது ஓட்டை ஸ்கூட்டரை உதைத்து கிளப்பி விடும் உதவியாளரும் கச்சிதம்.

வண்டியில் பாம் வைக்கப்பட்டிருப்பது கடைசி வரை தெரியாமலே காமெடி பண்ணியபடி கால்டாக்ஸி ஓட்டும் சதீஷ், படம் சயின்ஸ் பேசும் சீன்களில் எல்லாம் சலிப்பு தட்டாமல் பார்த்து கொள்கிறார்! அதுவும் அவருக்கு பார்த்து பேசப்பட்டு முடியாமல் போகும், அப்பாவுக்கு பயந்த சேல்ஸ் கேர்ள் பெண்ணின் காதல் கதைகள் செம ஹாஸ்யம்!

சிமியாக வங்கி பெண் அதிகாரியாக, தற்கொலை தடுப்பு பெண்ணாக பிந்து மாதவி, தினேஷூக்கு ஜோடியாக செமயாக நடித்திருக்கிறார். நகுலின் ஜோடியாக வரும் இன்னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா, நகுலுக்கு அவர் பாணியில் சஸ்பென்ஸாக ''ஐ லவ் யூ'' சொல்லும் இடங்களிலும், சோலார் பவரில் ஓடும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் சர்க்கரையே அள்ளிபோடும் காட்சிகளிலும் கச்சிதம். மற்ற இடங்களில் சதிஷீன் 'டாவா'க மகாவாக வரும் ஷாலு ஷம்மு அளவிற்கு கூட ஐஸ்வர்யா தத்தா நடிக்க ஸ்கோப் இல்லை பாவம்!

டெரரிஸ்ட்டாக வரும் ஆசிப், மொபைல் திருடன் ரமேஷாக வரும் அஜய், நகுலின் ''நாலும் தெரிந்த'' அம்மாவாக வரும் ஊர்வசி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், ஊர்வசி சொல்லும் சயின்ஸ் வார்த்தைகளும், விளக்கமும் ருசி!

எஸ்.எஸ்.தமனின் இசை, தீபக்குமார் பதியின் ஔிப்பதிவு, சபு ஜோசப்பின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ராம்பிரகாஷ் ராயப்பாவின் எழுத்து-இயக்கத்தில், புதுமையான கதையை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றிருப்பதற்காகவே ''தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'' படத்தை பாராட்டலாம்.

அதேநேரம், சில இடங்களில் செல்போன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை பேசும்போது, ''தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'' - ''ரசிகர்கள் தலையை பிடித்து அழுத்தி விடவும்'' எனும் ரீதியில் இருப்பதை மட்டும் இயக்குநர் தவிர்ந்திருந்தார் என்றால் இப்படம் இன்னும் மெச்சும்படியும் இருந்திருக்கும்.

Post a Comment

 
Top