0
இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது.


nov 1 - patel


இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் கூறியிருந்தால் அதை அவர் அரசியலாக்கியதாக குறை கூறலாம். ஆனால் சர்தார் வல்லபபாய் படேல் குறித்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் விழாவில், அவரது ஆளுமையைப் பாராட்டிப் பேசும்வேளையில், அவர் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.


அதற்காக காங்கிரஸ்காரர்கள், “படேல் எங்களுக்குத்தான் சொந்தம், பாஜக களவாடப் பார்க்கிறது’ என்று பேசுவது அர்த்தமற்றது. ஒருநாளும் படேல், மதவாத அரசியலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை. இந்து-முஸ்லிம் பிரச்னையிலும் பாகிஸ்தான் பிரிவினையின்போதும் விஷயங்களை வெளிப்படையாக பேசியவர். அதனாலேயே அவர் இந்து மதத்தினருக்கு ஆதரவாக இருந்தார் என்று முத்திரை குத்துவது பேதைமை.
பிரிட்டிஷ் அரசில் பஞ்சாப், வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்த இரு மாநிலங்களையும் அப்படியே பாகிஸ்தானுக்கு கொடுப்பது இயலாது என்று வாதிட்டவர்களில் முக்கியமானவர் படேல். இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தனியாகப் பிரித்துவிட்டு, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைக்கச் செய்தவர். இதனாலேயே அவர் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்ற பேச்சு அப்போது எழுந்தது.


பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்கள் தில்லியில் முஸ்லிம்களின் கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் புகுந்து ஆக்கிரமித்தபோது, “அங்கிருந்து இந்துக்கள் வெளியேற வேண்டும், அதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் கட்டளையை நிறைவேற்றியவர் படேல்.


படேலும் நேருவும் ஒரே அமைச்சரவையில் செயல்படுவது இயலாது என்ற நிலைமை உருவானபோது, படேல் பதவியிலிருந்து விலகக்கூடாது என்பதில் மகாத்மா காந்தி அதிக கவனமாக இருந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷர் குறிப்பிடுகிறார்:


“” ………இருவரில் எவரையும் தியாகம் செய்ய முடியாது என்று இறுதியிலே காந்தி தீர்மானித்தார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் அவசியம் என்று நிச்சயித்தார். இருவரில் எவர் விலகினாலும் அரசாங்கம் பலவீனமடைந்துவிடும். எனவே ஆங்கிலத்தில் நேருவுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். “நீங்களும் படேலும் எப்படியாவது ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 30-ஆம் தேதி மாலை நாலு மணிக்கு பிர்லா மாளிகையில் காந்தியைக் காண படேல் வந்தார். காந்தியின் வாயிலிருந்து இதே செய்தியைத்தான் அவரும் கேட்டுக்கொண்டார்….”


காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்புவரை உடன் இருந்தவர் படேல். உள்துறை பொறுப்பு வகித்த படேல், காந்தியைக் காக்கத் தவறினார் என்று அப்போது பரவலாக எழுந்த குற்றச்சாட்டு அவரை மீளாத்துயரில் தள்ளியது.


அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, படேல் இருவருக்கும் இடையே பிணக்கு இருந்தது வெளிப்படையானது. அது ஒன்றும் உட்பூசல் அல்ல. இருப்பினும் அது மதச்சார்பு, மதச்சார்பின்மை என்ற பாகுபாட்டால் ஏற்பட்ட பிணக்கு அல்ல.


“அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நேரு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றார்’ என்பதுதான் படேலுக்கு நேருவிடம் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்தது. தான் மட்டுமே காங்கிரஸ் என்று நேரு நினைப்பது தவறு என்று படேல் வலியுறுத்தினார். “எல்லாவற்றையும் பேசிவிட்டு முடிவெடுக்க நான் எதற்கு’ என்பது நேருவின் எதிர்வாதமாக இருந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு படேல் கொண்ட பிணக்கை யோசித்துப் பார்த்தால், நேருவின் அத்தகைய எண்ணம்தான் – படேல் விமர்சித்ததைப்போல, தான் மட்டுமே காங்கிரஸ் என்று செயல்பட்ட நேருவின் செய்கைதான் – இன்றைய காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு வித்திட்டது என்பதை எவரும் உணர முடியும்.


இன்று நரேந்திர மோடி தொட்டதொல்லாம் காவி நிறமாகிவிடுகிறது என்பதற்காக, படேல் பாஜக-வின் சொத்து ஆகிவிட மாட்டார். அவர் காங்கிரஸின் எதிரியும் அல்ல.அவரது பிணக்கு நேருவுடன் மட்டுமே.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top