0
தமிழ்நாடு எல்லைப் போராட்டம்’ என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது.

nov 1 - kanyakumari district

எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

“யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா…?” என்றால், “வராது” என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.

திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.

அவர் சொன்னார், “மாலவன் குன்றம் போனால் என்ன..? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று”. அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாக திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக்கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி என்றால் அது மிகையாகாது. அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

அதே போல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

“திருவிதாங்கூர்” சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும் மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள், நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடிய போது, பட்டம் தாணுப் பிள்ளை போராடியவர்களை சுட்டுத் தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப் பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.


நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.
இதற்கிடையில் தான் ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?


ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் “ஆந்திர மகாசபை” என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.


ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.


இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.


அதற்குமுன் நேரு என்ன செய்தார்… ? ஆந்திரர்கள் ‘மதராஸ் மனதே’ என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்… இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.


அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.
சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.


அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.


உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார்.


இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.

-பழ.நெடுமாறன்,

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top