0
காதோடு முளைச்ச கவச குண்டலம் மாதிரி ஆகிவிட்டது செல்போன்களும் அதன் பயன்பாடும். இப்படியொரு இன்றியமையாத சேவையில் இடையூறு வந்தால் என்னாகும்? அதுதான் இந்த படத்தின் ஒன் லைன். இந்த சிங்கிள் லைனுக்குள் சில பல கேபிள்களை நுழைத்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கிறார் அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா!

அடேயப்பா, ராயப்பா, இந்த படம் ஜோருப்பா…!

சென்னையில் முக்கிய இடங்களில் குண்டு வைக்க கிளம்பி வருகிறான் ஒரு தீவிரவாதி. கால்டாக்ஸி ஒன்றில் குண்டை பொருத்தி, பொருத்தமான இடத்தில் வெடிக்க வைக்கும் திட்டத்துடன் அவன் செயல்பட, இன்னும் சில நிமிஷங்களில் செல்போன் சுவிட்சை அழுத்தினால் கார் வெடிக்கும். சென்னையின் அந்த பகுதியே காலி. அழுத்தப்போகிற அந்த நிமிடம் பார்த்துதானா காந்த புயல் பூமியை தாக்க வேண்டும்? செல்போன் சேவை மட்டும் கட்!

கூடவே இன்னும் மூன்று காதல் கிளைக்கதைகள்! வில்லேஜ் விஞ்ஞானி நகுலுக்கும் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா தத்தாவுக்கும் காதல். தினேஷுக்கும் பிந்து மாதவிக்கும் காதல், டாக்ஸி டிரைவர் சதீஷுக்கும் ஷாலு ஷம்முவுக்கும் காதல். இந்த செல்போன் சேவை ‘கட்’ காரணமாக இவர்களுக்குள்ளும் அநேக விளைவுகள். இறுதியாக செல்போன் சிக்னல் பிரச்சனை தீர்ந்ததா? குண்டு வெடித்ததா? உயிருக்கு போராடிய பிந்து மாதவி என்னானார் ? க்ளைமாக்ஸ்!

இப்படத்தின் திரைக்கதை ஸ்பெஷலே, தினேஷுக்கும், நகுலுக்கும், சதீஷுக்கும் தொடர்பு இல்லாமல் கதை நகர்வதுதான். அதை விட ஸ்பெஷல் இம்மூவரின் காதலும் அந்த காதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகளும்! (எங்கேயும் எப்போதும் ஜெய் அஞ்சலி காட்சியை ரசித்தவர்கள் அதே உணர்வுடன் மீண்டு வரலாம் தினேஷ் பிந்துமாதவி எபிசோடை பார்த்த பிறகு)

ஓய்வு நேரத்தில் தற்கொலை தடுப்பு சேவையில் ஈடுபடும் வங்கி ஊழியர் பிந்துமாதவி, தினேஷையும் அப்படியொரு தற்கொலை ஆசாமியாக நினைத்து அன்பை பொழிந்து அவரை மாற்ற முயல, அதற்கப்புறம்தான் தெரிகிறது. பார்ட்டி அவரல்ல. வேறொருவர் என்று. அந்த ஒரே நாளில் லவ்வில் விழுந்துவிடும் தினேஷ், ஏங்க… உங்களை என்னால மறக்க முடியாது. இனிமே உங்களை நான் நினைச்சுக்கூட பார்க்கக் கூடாது. அதுக்காக நாக்கை புடுங்கிக்கிற மாதிரி என்னை திட்டுங்க’ என்று கேட்பதில் துவங்குகிறது இந்த ஹைக்கூ காதல். இவர் அவரை திட்டுவதற்கு ஏகப்பட்ட ரிகர்சல் எடுத்துக் கொண்டு கிளம்பினாலும், ம்ஹும். ஒரு வார்த்தை வரவில்லை. ஒரு கட்டத்தில் ட்விஸ்ட் வேண்டி பிந்துவை குழியில் தள்ளுகிறார் டைரக்டர். அவர் மேல் அந்த பாறாங்கல் விழுமோ, விழாதோ? காப்பாத்துடா பெருமாளே… என்று ரசிகர்களை நகம் கடிக்க விடுகிறார். சம்பவம் செயற்கையாக இருந்தாலும், ரசிக்க முடிகிறது. தினேஷை விடுங்கள். பிந்து மாதவிக்கு உடனடி தேவை வேளைக்கு ஐந்து கப் பாதாம் பால். கட்டாயம் ரெண்டு வேளை மட்டன் பிரியாணி. (இம்புட்டு இளைப்பு ஆவாதும்மா…!)

நகுல் இதற்கு முந்தைய படத்தில் தேவைக்கு அதிகமாக நடித்து தள்ளுவார். இந்த படத்தில் கேமிராவுக்கு பின்பக்கம் நின்று கொண்டு மிரட்டி மிரட்டியே நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவையடக்கம், நாவடக்கம், புலனடக்கம் எல்லாம் கலந்து பின்னியெடுத்திருக்கிறார் தம்பி. வாகாக படுத்துக் கொண்டு காய்கறி அரியும் அம்மா ஊர்வசியிடமே லவ்வருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப சொல்கிற காட்சியில் ரசனை ரசனை. மொட்டை மாடி விஞ்ஞானிகள் கழகமாக அந்த ஏரியாவை மாற்றி அவர் பண்ணும் கூத்துகள் எதுவுமே புரியாவிட்டாலும், சுகம். (கொஞ்சம் நீ….ளத்தை குறைங்க அண்ணாச்சி) அந்த இடத்தில் சின்ன சின்ன நகாசு காட்சிகளில் அசரடிக்கிறார் டைரக்டர். குறிப்பாக நகுல் தோளில் தோழி சுந்தரி யதார்த்தமாக கை வைக்க, அதே யதார்த்தத்துடன் அந்த கையை ஐஸ்வர்யா தத்தா எடுத்துவிடும் காட்சி.

ஊர்வசி வருகிற அந்த சில காட்சிகளில் சின்னாபின்னமாகிறது தியேட்டர். படித்தவர்களுக்கு பிராக்டிகல் நாலெட்ஜ் இல்லை என்பதை படிக்காத ஊர்வசியின் பக்காவான விஞ்ஞான அறிவோடு ஒப்பிட்டு அசரடித்திருக்கிறார் இயக்குனர்.

சதீஷ் சிரிக்க வைக்கிறாரோ இல்லையோ? அவரது லவ்வரின் ‘வைட் ஆங்கிள்’ நட்பும், நிமிஷத்துக்கு ஒரு முறை யாரோ ஆண் பெயரை சொல்லி அவர் சதீஷை வெறுப்பேற்றுவதும் செம கலாட்டா! அந்த ஷாலு ஷம்முவும் மிக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு அறிமுகவுரை கொடுக்கிறார் இயக்குனர். அது என்னவென்றே புரிந்து கொள்ள முடியாதளவுக்கு அதற்கு பின்னணி இசையை போட்டு கேட்கவிடாமல் செய்கிறார் தமண். அங்கு ஆரம்பிக்கும் இவரது தடபுடல் உருட்டல் சமாச்சாரம், க்ளைமாக்ஸ் வரைக்கும் தொடர்கிறதா? ‘பின்னணி இசை என்றால் என்ன என்பதை பிடிச்சு வச்சு சுளீர் சுளீர்னு சொல்லித்தராமல் அடுத்த படத்தில் இவருக்கு சான்ஸ் கொடுக்கவே கொடுத்துராதீங்க சாமிகளா’! நல்லவேளை… பாடல்களில் ஆறுதல் தருகிறார். தப்பித்தோம்.

ஒளிப்பதிவாளர் தீபக் குமாரின் ஏரியல் ஷாட்டுகள் பல கதையோடு நம்மை இணைத்து இழுத்து மிரட்டியிருக்கிறது.

தமிழுக்கு எதை வேணும்னாலும் அழுத்திட்டு போங்க. நல்லா பொழுதுபோகணும்னா முதல்ல தியேட்டருக்கு பைக்கை அழுத்துங்க மக்களே….

Post a Comment

 
Top