0
காக்கி சட்டை பிரஸ்மீட். கரெக்டான நேரத்தில் என்ட்ரி கொடுத்தார் சிவகார்த்திகேயன். இயக்குனர் துரை. செந்தில்குமார், படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் உள்ளிட்ட சிலர் பேசி முடித்த பின், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் பேசுவார் என்று பி.ஆர்.ஓ ரியாஸ் அறிவிக்க, ‘அப்படியெல்லாம் யாரும் எதிர்பார்க்கலைப்பா…’ என்றொரு கமெண்ட் வந்தது நிருபர் கூட்டத்திலிருந்து! சிவகார்த்திகேயனுக்கு பூனைக் காது.

‘சார்… அப்படியெல்லாம் பில்டப் கொடுக்காதீங்க. பாருங்க… நாங்க எதிர்பார்க்கலன்னு அவங்களே சொல்றாங்க’ என்று தலைக்கு வந்த கத்தியை சாதுர்யமாக தள்ளிவிட்டார்! எந்த காரத்தையும் சமாளிக்கிற நாக்கு இருந்தால், அதைவிட வேறென்ன பலம் வேண்டும் தனியாக? சுமார் இருபது நிமிஷம். சொல்ல வந்ததை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிவிட்டு அமர்ந்தார். ஆனால் அவரது பேச்சின் துவக்கமே பெரிய கிசுகிசு ஒன்றை புன்னகையால் மூடியது.

‘எனக்கும் தனுஷ் சாருக்கும் பிரச்சனைன்னு எழுதுறாங்க. ஒரு பிரச்சனையும் இல்லைங்க’. இதுதான் அவரது முதல் விளக்கம். அதற்கப்புறம்தான் மற்ற பேச்செல்லாம்.

இந்த படத்தை ஆரம்பிச்சதிலிருந்தே எதிலும் தலையிடுறதில்ல அவர். நீங்க நல்லாதான் செய்வீங்க. உங்க மேல நம்பிக்கை இருக்குன்னு சுதந்திரம் கொடுத்துட்டு ஒதுங்கிட்டார். இங்கு அவர் வராததற்கும் கூட அதுதான் காரணம். நீங்க பார்த்துக்கங்க எல்லாத்தையும்னு சொல்லிட்டார் என்றார். (நம்பிட்டோம்)

அடுத்து கேள்வி பதில் கட்டம்.

இந்த படத்தில் நீங்க போலீஸ் அதிகாரியா நடிக்கிறீங்க. காக்கி சட்டை போட்டதும் சென்ட்டிமென்ட்டா ஒரு ஃபீல் வந்திருக்குமே? அதை சொல்லுங்க என்றது முதல் கேள்வி.

உண்மைதான் சார். அப்பா போலீஸ் அதிகாரியா இருந்தார். அவருக்கு என்னை ஐபிஎஸ் படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனால் அது முடியாம போச்சு. அப்பா மறைவுக்கு பிறகு நானும் வேறொரு ஏரியாவுக்கு வந்துட்டேன். இந்த டிரஸ்சை போடும்போது என்னையறியாமல் அந்த கம்பீரம் வந்துச்சு. அந்த டிரஸ்சோட நான் எடுத்துகிட்ட ஸ்டில்களை அம்மா பார்த்தாங்க. நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. அதுக்கும் மேல அவங்களால எதையும் வெளிப்படையா சொல்ல முடியலை. பட்… ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் அது என்றார்.

அதற்கப்புறம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பல கேள்விகள். நறுக்கு தெறித்தார்போல எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்த சிவகார்த்தியேன், ‘இப்ப என்னோட கால்ஷீட்டை நான்தான் பார்த்துக்குறேன். யாரும் எனக்கு மேனேஜரோ, உதவியாளரோ இல்லை’ என்றார். என்னாச்சுங்க பாஸு?

தொடர்பான கிசுகிசு ஒன்று- இந்த பிரஸ்மீட்டை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் நேராக போயிருந்த இடம், விஜய் டி.வி யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பைனலுக்குதான். இவர் உள்ளே நுழையவும், அங்கு சிறப்பு அழைப்பாளராக இருந்த தனுஷ் வெளியேறவும் சரியாக இருந்தது. லைவ் புரோகிராம் அல்லவா? சண்டை சச்சரவு உண்மைதான் போல… என்று கொளுத்திப்போட்டது மீடியாவுலகம். நல்லவேளை… நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மீண்டும் என்ட்ரியான தனுஷ், சிவகார்த்திகேயனை கட்டிப்பிடிக்க, எல்லாமே சுக மயம். சுப மயம்!

Post a Comment

 
Top