0
ஒரு ஹீரோ கதைகள் இனிமேல் கதைக்கு ஆகாது என்று புரிந்து கொண்ட இயக்குநர் ‘ராம்பிரகாஷ் ராயப்பா’, நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ் இருவரையும் களம் இறக்கிவிட்டு ஒரு கதை பின்னியிருக்கிறார். அதில் தொழில்நுட்பக் கல்வியையும் புகுத்தி ‘பின்னியும்’ எடுத்திருக்கிறார்.

இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் நகுலுக்கும், தினேஷுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது போலவே படத்தில் வரும் காமெடியன் சதீஷுக்கும் இந்த ஹீரோக்களுக்கும் கூட சம்பந்தமில்லை. இவர்கள் மூவரை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த செல்போன் உபயோகிப்பாளர்களை இணைக்கிறது ஒற்றைப்பிரச்சினை.
அவ்வப்போது ‘எஸ்எம்எஸ்’களிலும், சமீபமாக ‘வாட்ஸ் ஆப்’பிலும் வரும் தகவல்தான் கதை முடிச்சு. சூரியனிலிருந்து வரும் காந்தப்புயல் பாதிப்பால் பூமியில் செல்போன் சேவை தடைப்படுகிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து தற்காலிகத் தீர்வு ஒன்றை அறிவியலில் நாட்டம் கொண்ட நகுல் கண்டுபிடிக்கிறார்.
இன்னொருபக்கம் அப்படி செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் தன் காதலி ஆபத்திலிருக்கும் தகவல் தெரியாமல் போகிறது தினேஷுக்கு. இன்னொரு இடத்தில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் சதீஷ் காரில், பயங்கரவாதி ஒருவன் வைத்த செல்போன் குண்டையும் வெடிக்க வைக்க முடியாமல் போகிறது.
நகுல் செல்போன் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பரபரப்பு ஓரிடத்திலும், அப்படித் தீர்வு கண்டுவிட்டால் மேற்படி இரண்டு சம்பவங்களில் தினேஷின் காதலி பிந்துமாதவியின் உயிரும், வெடிகுண்டால் பல உயிர்களும் பலியாகும் சாத்தியம் இருக்க, ‘திக்…’ ‘திக்…’காகக் கழிகிறது நிமிடங்கள். அது ரொம்பவும் ‘திக்’காகி விடக்கூடாதென்று காமெடி ட்ரீட்மென்டால் திரைக்கதையை ‘தின்’னாக்கி இருக்கிறார் இயக்குநர்.
நகுலுக்கு நடனம், சண்டை என்கிற ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அமைதியான கேரக்டர். விஞ்ஞானி என்பதால் கொஞ்சம் மறை கழன்றவர் போல் தெரிவதும் நல்ல நடிப்பின் ஒரு அம்சம். இதைப்போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பது, படத்தில் அவர் ஏறி நிற்கும் செல்போன் டவர் உயரத்துக்கு அவரை தூக்கிச் செல்லும்.

ஒரே குறை, அவர் பேசும் தமிழ்தான்..! முக்கியமாக மாடுலேஷன். தமிழில் டப் செய்யப்பட்ட இந்தி ‘காம்ப்ளான்’ விளம்பரம் கேட்பதைப் போலவே ஒரு பிரமை..!
அட்டகத்தி’ டிரேட் மார்க்குடனேயே வருகிறார் தினேஷும். ரியல் எஸ்டேட்டில் விலை போகாத ஃபிளாட்களை விற்கும் சாமர்த்தியத்துடன் பிந்து மாதவியின் காதலுக்காக அவர் வாயிலிருந்து ‘வசவு’க்காக ஏங்கிக் கொண்டிருப்பது திரைக்கதையில் புது ‘நெசவு’.

இயல்பிலேயே சாந்த சொரூபியாக இருக்கும் பிந்து மாதவி, தினேஷத் திட்ட எத்தனைதான் மானிட்டர் பார்த்தாலும் வராமல், அவரது அலைக்கழிப்பில் ஒருநாள் இயல்பாகவே கோபம் ஏறி, தினேஷை ‘லெஃப்ட் அன்ட் ரைட்’ வாங்குவதில் ‘லந்து மாதவி’யாகிறார்.

நகுலின் காதலியாக வரும் ‘ஐஸ்வர்யா தத்தா’ நன்றாகத்தான் இருக்கிறார் பார்வைக்கு ‘கெத்தா’. நகுலைப் போல் ஒருவனது காதல் வேண்டாம் என்று அறிவுறுத்தும் தோழியே, நகுலின் சாதுர்யம் பார்த்து அவர் தோளில் கைபோடுவதில் காண்டாகி, அந்தக் கையை எடுத்து விடும் சாமர்த்தியத்தில் ஐஸ்வர்யா, ‘வெரி நைஸ்’வர்யா..!

நகுலின் அம்மா ஊர்வசியின் கேரக்டரை எப்படித்தான் இயக்குநர் யோசித்தாரோ, அப்படி ஒரு அமர்க்களமான சிந்தனை. சப்பாத்தி திரட்டிக்கொண்டே நகுலின் செல்போனில் ஐஸ்வர்யா அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு மகனின் சொல்படியே பதில் எஸ்எம்எஸ் அனுப்பி காதலுக்கு ஜாலி தூதாவது ஜமாய்ப்பான சிந்தனை.
அதேபோல், மகனின் அறிவியலுக்கு உதவி உதவி, வாயைத் திறந்தால் அறிவியல் வார்த்தைகள் கொட்டும் அழகில் ஊர்வசி, நடிப்பு ராட்சசி..!

சதீஷும் அவர் காதலியாக வரும் ஷாலு ஷம்முவும் காமெடியில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். சதீஷின் செல்போனைத் திருடி வைத்துக்கொண்டு பயங்கரவாதிக்கு உதவும் அஜய்யும் கலக்கியிருக்கிறார். சதீஷ் போனை ஆட்டையைப் போட்டது மட்டுமல்லாமல் காதலியுடன் பேச சதீஷுக்குக் கான்பரன்ஸ் போட்டுக்கொடுத்து, அவர் கொடுக்க மறந்த ‘இச்’சை இடையில் புகுந்து இவர் கொடுப்பது ‘நச்..!’
ஊரே சுற்றி வரும் வெடிகுண்டு கடைசியில் பயங்கரவாதி ஆசிப்பின் காருக்கே வந்து சேர்வதில் மட்டும் சினிமாத்தனம் தலைதூக்குகிறது. அதேபோல், தமிழனை இழிவுபடுத்திப் பேசும் பயங்கரவாதியை தமிழர்கள் நாலு சாத்தி சாத்தியிருக்க வேண்டாமா..? தமிழில் தலைப்பு மட்டும் வைத்து விட்டு இயக்குநர் விட்ட ‘கோட்டை’ அது..!

‘வாஸ்து’வுக்காக அத்தனை ‘டன்’ எடையுள்ள கல்லை அந்தரத்தில் தொங்க விடுவதிலும் லாஜிக் இல்லை. எந்த வாஸ்துவில் அப்படி சொல்லியிருக்கிறார்கள், மிஸ்டர் ராயப்பா..?
படத்தின் முதல் மரியாதைக்குரிய டெக்னீஷியன் ஒளிப்பதிவாளர் ‘தீபக்குமார் பாடி’. கடைசி இடம் பிடிப்பவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். ‘டொய்ங்…’ ‘டொய்ங்’ என்று எல்லா காட்சிகளுக்கும் இடைவெளி இல்லாமல் ‘ஆர் ஆர்’ போட்டு வசனங்களைப் புரிய விடாமல் செய்வதில் ‘இம்சை’யமைப்பாளர் ஆகியிருக்கிறார் அவர்.

இந்தக் குறைகளைத் தாண்டி படம் நிற்பது தனித்துவமான கதைக்களத்திலும், வெகுநேர்த்தியான திரைக்கதையிலும்தான்..! வசனம் எழுதியிருக்கும் ஆர்.செந்தில்குமாருக்கு வந்தனம்..!
வித்தியாசமான முயற்சிக்கு ‘எண் ஒன்றை அழுத்தி’ப் பாராட்டவும்..!

Post a Comment

 
Top