0
இளம் இசை மேதையாக ஜனங்களுக்கு அறிமுகமாகி, வாழ்ந்த குறுகிய காலங்களிலும் அன்றாடம் இசையாகவே வழிந்து காற்றில் கரைந்து போனவர் மாண்டலின் சீனிவாஸ். மிக மிக இளம் வயதில் அவர் காலமானாலும் கூட, அவரது இசைப்பணியை இவ்வுலகில் நிலைத்து நிற்க செய்யும் விதத்தில் சில காரியங்களை செய்து வருகிறார்கள் அவரது சிஷ்யர்கள். அதுவும் திரைப்பட இசையுலகில் வலுவான இடத்திலிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் பற்றி பேச ஆரம்பித்தாலே உருகிப் போகிறார். என்னை அவரது உடன் பிறந்த தம்பி போலதான் வளர்த்தார் என்று கூறும் அவர், தனது குருநாதரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து நிறைவேற்றுகிறார் மாண்டலின் சீனிவாசனின் சகோதரர் ராஜேஷ். ‘தி கிரேட் மாண்டலின்’ என்று பெயர் சூட்டப்பட்டு பிப்ரவரி 28 ந் தேதி மாலை 7 மணிக்கு சென்னை மியூசிக் அகடமியில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எல்லா பொறுப்புகளையும் அக்கறையாக கவனித்து நடத்திக் கொண்டிருக்கிறது எஸ்எஸ்இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம். ஆச்சர்யம் என்னவென்றால் கர்நாடக இசையுலகத்தின் அத்தனை ஜாம்பவான்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை இலவசமாகவே நடத்துகிறார்கள் இவர்கள். விழாவில் கமல்ஹாசனும், இசைஞானி இளையராஜாவும் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்கள்.

‘இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தணும்னு முடிவு செஞ்சுட்டோம். ஆனால் பொருத்தமா ஒரு பெயர் வைக்கணும்னு யோசிச்சிட்டு இருந்தோம். அந்த நேரத்தில் பத்திரிகையாளர் சு.செந்தில்குமரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். தலைப்பு இன்னும் முடிவு பண்ணல என்று அவரிடம் சொல்லிய சில நிமிடங்களில் இந்த தலைப்பை சொன்னார்’ என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்த தலைப்பை ஆங்கிலத்தில் எழுதினால் சு.செந்தில்குமரனின் ரசனை வெளிப்படும் உங்களுக்கு.

மாண்டலின் சீனிவாசுக்கென்றே ஒரு பிரத்யேக பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம் தேவி ஸ்ரீ பிரசாத். அதை இந்த நிகழ்ச்சியில் எல்லா இசைக்கலைஞர்களும் பாடவிருக்கிறார்கள்.

Post a Comment

 
Top