0

1552 படங்களுக்கு இசையமைத்து, இளையராஜாவை முந்தினார் சங்கர் கணேஷ்….

இளையராஜா தற்போது எந்தப்படத்துக்கு இசையமைத்தாலும், அந்தப் படத்தை இளையராஜா இசையமைக்கும் 1000 ஆவது படம் என்று பப்ளிசிட்டி பண்ணுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

தனுஷ் நடித்த ஷமிதாப் ஹிந்திப்படமும் இளையராஜாவின் 1000 ஆவது படம்தான்.

பாலாவின் இயக்கத்தில் வளர்ந்து வரும் தாரை தப்பட்டையும் 1000 ஆவது படம்தான்.

சங்கர் கணேஷ் இப்படி எல்லாம் பப்ளிசிட்டி தேடிக்கொள்பவரில்லை.

தான் இசையமைத்த படங்களின் எண்ணிக்கையை புள்ளிவிவரத்தோடு கையில் வைத்திருக்கிறார்.
‘எண்ணம் புது வண்ணம்’ என்ற படத்துக்கு சங்கர் கணேஷ் தற்போது பின்னணி இசையமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட எல்லா மொழி படங்களையும் சேர்த்து இது அவருக்கு 1552 படமாம்!

எம்.ஜி.ஆரால் 1969 ல் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்.

அதற்கப்புறம் இதய வீணை, ஆட்டுக்கார அலமேலு, நீயா, எங்க சின்ன ராசா உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.

இனிமையான பாடல்களையும், ஏகப்பட்ட ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.
அதில் பல பாடல்கள் ரஜினி, கமல் நடிப்பில் வெளியானவை.

அதன் பிறகு சங்கர் மறைந்த பிறகும், கணேஷ் அதே பெயரில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். இசையமைத்தும் வருகிறார்.

25 வருஷத்துக்கு முன்னால எழுதின நியூஸை இப்ப என்னத்துக்கு மறுபிரசுரம் பண்ணிருக்காங்கன்னு நினைச்சுடாதீங்க… இது ஃபிரஷ் நியூஸ்தான்.

மன்னன், வெற்றிவிழா, உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகிய பணியாற்றிய ஆம்பூர் ஜெ.நேதாஜி தயாரித்திருக்கும் படம் – எண்ணம் புது வண்ணம்.

சிவாஜி புரடக்ஷன் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக சுமார் பத்தாண்டுகள் பணியாற்றிய இவர், இப்போது முதன் முறையாக தயாரித்திருக்கும் படம் இது.

விவேக் ராஜ் என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

திவ்யா நாகேஷ், சத்ய சாய் என்ற இரண்டு கதாநாயகிகள்.

கதையில் வரும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் ஆம்பூர் நேதாஜியே நடித்திருக்கிறார்.

இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் பணியாற்றிய ராகவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சௌந்தர்யன் இசையமைத்திருக்கிறார்.

தாயன்புக்காக ஏங்கும் ஒருவன், தொடர்ந்து மூன்று பெண்களால் ஏமாற்றத்திற்கு ஆளாகிறான். அதற்கப்புறம் பெண்கள் பற்றிய எண்ணத்தையே மாற்றிக் கொள்ளும் அவன், பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை லவ் வித் ஆக்ஷன் த்ரில்லர் வகைப்படமாக சொல்லியிருக்கிறாராம் ராகவன்.

முழு படத்தையும் பார்த்த நேதாஜி, இந்த படத்திற்கு பின்னணி இசையை சங்கர் கணேஷ் அமைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம்.

தான் இசையமைக்காத படமாக இருந்தாலும் கூட, நேதாஜியின் நட்பிற்காக பின்னணி இசையை அமைத்துக் கொடுத்த சங்கர் கணேஷ் அதற்காக ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

சந்திரமுகி, சிவகாசி, தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஒக்கடு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி.ஜோசப் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

படத்தின் பின் தயாரிப்பு இயக்குனர் ஷண்முகா வெங்கடேஷ்.

‘எண்ணம் புது வண்ணம்’ மார்ச் இறுதி வாரத்தில் திரைக்கு வருகிறது.

Post a Comment

 
Top