0
சிவகார்த்திகேயனின் நடிப்பில் 7 ஆவது படமாக பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது – ‘காக்கி சட்டை’.

ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார்.

இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் காக்கி சட்டை படத்துக்கு காத்துக்கிடக்கிறது ரசிகர்கள் கூட்டம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யாவே இப்படத்திலும் கதாநாயகி!

எனவே இருவருக்குமான எக்ஸ்ட்ரா கெமிஸ்ட்ரி வேறு!

வழக்கத்தைவிட அனிருத்தின் இசையில் கூடுதல் ஈர்ப்பு.

இப்படியாக, காக்கி சட்டை படத்தின் மீது ரசிக எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்க….

காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்ற விஷயமும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.

தமிழ்சினிமாவில் ஹீரோ காக்கி சட்டைப் போட்டாலே… ஒரே அர்த்தம்தான்.
அது.. நிச்சயம் அதிரடி ஆக்ஷன் படம்!

காக்கி சட்டை படத்தையும் மக்கள் அவ்வாறே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

போதாக்குறைக்கு காக்கி சட்டை படத்தின் பப்ளிசிட்டிகளில் காக்கி யூனிபார்மில் விறைத்துக் கொண்டு நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சியிலும்கூட தான் காக்கி சட்டை போட்ட தருணத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.

அதை மனதில் வைத்து, இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தபோது எப்படி ஃபீல் பண்ணினீர்கள்? என்ற கேள்வியை சிவகார்த்திகேயனிடம் எழுப்பினோம்..

”உண்மையிலேயே இப்படத்திற்காக காக்கி சட்டையை போட்டதும் என் அப்பா ஞாபகம் வந்தது. என்னை ஃபீல் பண்ணவும் வச்சது. அப்பா நேர்மையான அதிகாரியாக இருந்ததினால், என்னையும் ஐ.பி.எஸ். படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று வீட்டில் ஆசைப்பட்டனர். அவர்களது ஆசை நிறைவேறவில்லை. இப்படத்தில் நான் போலீஸ்காரராக நடித்ததன் மூலம் ஒரு சிறிய மனதிருப்தி கிடைச்சிருக்கு! ‘காக்கி சட்டை’யில் என்னை பார்த்த என் அம்மாவுக்கும் அப்பாவுடைய நினைவுகள் வந்திருக்கும். ஆனால் அதை அவர் அதிகமாக வெளிகாட்டிக்கொள்ளவில்லை” என்று கண்கலங்கப் பேசினார் சிவகார்த்திகேயன்.

இது போன்ற விஷயங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, காக்கி சட்டை படத்தில் பக்கா ஆக்ஷன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக எண்ணத்தோன்றும்.

உண்மையில், காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன்….சிரிப்பு போலீஸா… சீரியஸ் போலீஸா?
நாம் அறிந்தவரையில் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சிரிப்பு போலீஸ் வேடம்தான். அதாவது போலீஸ் கான்ஸ்டபிள் வேடம்.

கான்ஸ்டபிளாக இருந்தாலும், அவரை டீ வாங்கி வருவது மற்றும் எடுபிடி வேலைகளை மட்டுமே செய்ய வைக்கின்றனர்.

‘திருடன் போலீஸ்’ தினேஷைப்போலவே இவரும் பிடிக்காமலே கான்ஸ்டபிள் வேலையை செய்து வருகிறார்.

இப்படியொரு சூழலில், மிகப்பெரிய குற்றச்செயல் ஒன்று அவரது கவனத்துக்கு வருகிறது.

அதுவரை சிரிப்பு போலீஸாக இருந்த சிவகார்த்திகேயன் சீரியஸ் போலீஸாகி அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார்.

எதிர்நீச்சல் படத்தில் முக்கால்வாசி படம் வரை காமெடியாய் கதையை நகர்த்திய இயக்குநர் துரை செந்தில்குமார், கடைசியில் சீரியஸ் ஏரியாவுக்குள் ட்ராவல் பண்ணினார்.

சிவகார்த்திகேயன் என்கிற காமெடி இமேஜ் கொண்ட ஹீரோவுக்கான டிரான்ஸ்மிஷனை கவனத்துடன் கையாண்டிருப்பார்.

அந்த ஃபார்முலாதான் எதிர்நீச்சல் படத்துக்கு வெற்றியைக் கொடுத்தது.

அதுபோன்ற ட்ரீட்மெண்ட்டிலேயே காக்கி சட்டை படத்தின் கதையையும் சிரிப்பு பாதி… சீரியஸ் பாதி என்று சொல்லி இருக்கிறாராம் துரை செந்தில்குமார். 

Post a Comment

 
Top