0
சொன்னா நம்புங்க தனுஷுக்கும் எனக்கும் சண்டையில்லை

'தன்னை வளர்த்து விட்ட தனுஷுடன் மோதுகிறார்; மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறார்; பட விழாக்களுக்கு அடியாட்களுடன் வருகிறார்' என, நாௌாரு வதந்தியும், பொழுதொரு செய்தியுமாக தன்னை ரவுண்டு கட்டி அடித்தாலும், தன் மீது பாயும் அத்தனை அம்புகளையும், பொறுமையாகவே எதிர்கொள்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு சாமானிய மனிதனும் திறமையிருந்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுத்த,சிவகார்த்திகேயனுடன் பேசியதிலிருந்து...

காமெடி டிராக்கில் இருந்து, திடீரென காக்கி சட்டை டிராக்கிற்கு மாறியது ஏன்?

ஒவ்வொரு படத்திலும், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. மாறுபட்ட வேடங்களில் நடிப்பது, என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவில்லை என்றாலும், அதற்கான பாதையையாவது காண்பிக்கும் என, நம்புகிறேன். 'எனக்கு காமெடிதான் வரும்; அதை மட்டும் தான் செய்வேன்' என, ஒரு நடிகன் கூற முடியாது. காமெடியை தவிர, வேறு சில விஷயங்களையும் செய்ய முடியும் என, நிரூபிக்க வேண்டும்; அதற்கான முயற்சி தான், 'காக்கிச் சட்டை'.

பல கோடி ரூபாய் சம்பளம்வாங்குறீங்களாமே?

நீங்க ஒரு ஆளு தான் பாக்கி. எப்படித் தான் இப்படி, 'எக்ஸ்ட்ரா பிட்டிங்' வைத்து அடிக்கிறாங்களோ தெரியவில்லை. 'மிமிக்ரி' செய்யும் போது, ஒன்றரை மணி நேரத்துக்கு, 2,500 ரூபாய் தருவாங்க. அப்போது வாங்கிய சம்பளத்தையும், இப்போது படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தையும் ஒப்பிடும்போது, அதை விட, தற்போது பல மடங்கு அதிகமாக வாங்குகிறேன் என்பது உண்மை தான்.

ஷூட்டிங் நடக்கும் போதும், படம் கேமரா வுக்குள் இருக்கும் போதுதான் அது ஒரு கலை; வெளியில் வந்து விட்டால் எல்லாமே வியாபாரம் தான். தயாரிப்பாளர் சம்பளம் தருகிறார்; மக்கள் காசு கொடுத்து படம் பார்க்கின்றனர். இதை மனதில் வைத்து, படங்களில் நடிக்க தயார்படுத்திக்க வேண்டியுள்ளது. ஆறு படம் முடித்து, 'காக்கிச்சட்டை' என், ஏழாவது படம். தற்போது, மக்கள் எனக்கு கொடுத்துள்ள இடம் ரொம்ப பெரியது. இது, எனக்கு ஒருவிதமான பயத்தை தருகிறது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நடிக்கும்போதும், அந்த பயம் மனதுக்குள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வசிக்கிறேன். அதுவும், 'டிவி'யில் வேலை பார்க்கும்போது வாங்கியது. இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான், நடிப்பேன் என, 'டிமாண்ட்' செய்யும் வழக்கம் எனக்கு எப்பவுமே இல்லை.

உங்களின் சினிமா வளர்ச்சிக்கு, தனுஷ் ஒரு வழிகாட்டியாக இருந்தார். நீங்களும், யாருக்காவது வழிகாட்டியாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?

இப்போது, ஒரு நம்பிக்கைக்குரிய இடத்துக்கு வந்து உள்ளேன். என் வாழ்நாளில், ஒரு சில பேருக்காவது, அதுபோல் மனப்பூர்வமாக உதவ வேண்டும் என, நினைக்கிறேன். இந்த எண்ணம்,அவ்வப்போது என் மனதுக்குள் வந்து போகிறது.கண்டிப்பாக, யாருக்காவது உதவி செய்வேன்.

உங்களின் 'கால்ஷீட்' பெறுவது ரொம்ப சிரமமாமே?

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய படம், 'காக்கிச்சட்டை; இப்போது தான் ரிலீஸ் ஆகுது. ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில், நான்கு படங்களில் நடித்து முடித்து, என்ன சாதித்து விடப் போகிறேன். 'ஒரு மணி நேரம், இந்த வேலை; அடுத்த அரை மணி நேரம், அந்த வேலை' என, என்னால் செய்ய முடியாது; எனக்கு அந்த அளவுக்கு அறிவு உள்ளதா என்றும் தெரியவில்லை.

நீங்க, விஜய சேதுபதி எல்லாம் வந்த பின், தமிழ் சினிமா வேறு ஒரு களம் நோக்கி

பயணிப்பதாகநினைக்கிறீங்களா?

நான் நடிக்கும் படங்கள் எளிமையாகவும்,தியேட்டரில் அனுபவித்து பார்க்க கூடிய வகையிலும், பொழுது போக்கு படங்களாக உள்ளன. விஜய சேதுபதி நடிக்கும் படங்கள், தமிழ் சினிமாவில் புதுமையான கதை கொண்டவை. புதுமுகங்கள் எல்லாரும் பெரிய பெரிய படங்களில் நடிப்பது, நல்ல விஷயம். அதிக அளவில் படங்கள் வரும்போது, தமிழ் சினிமாவில் வியாபாரமும் பெரிதாகிறது. இப்படி, எங்கேயோ ஒரு புள்ளியில் நாங்களும் இருக்கிறோம் என்பதுசந்தோஷமா இருக்கு.

தனுஷுக்கும், உங்களுக்கும் அப்படி என்ன தான் பிரச்னை; சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட, அவர், பாதியிலேயே...

கொஞ்சம் இருங்க...இருங்க (குறுக்கிட்டு பேசுகிறார்) 'டிவி' நிகழ்ச்சியின்போது நடந்தது என்ன என்ற உண்மையை உங்களிடம் சொல்லி விடுகிறேன். முதலில், அந்த விழாவுக்கு நான் உட்பட, 'காக்கிச்சட்டை' படத்தின் ஒட்டு மொத்த டீமும் போவதாகத் தான் ஏற்பாடு. ஆனால், அன்றைக்கு பிரஸ் மீட் இருந்ததால், அதைமுடித்து, நேராக, 'டிவி' நிகழ்ச்சிக்கு போய் விட்டோம். அதற்குள் தனுஷ் அங்கே வந்துவிட்டார். அப்போதே எல்லாரிடமும், 'எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதனால், அதை முடித்து விட்டு, திரும்பவும் வந்து நிகழ்ச்சியில் இணைந்து கொள்கிறேன்' என, கூறிவிட்டுத் தான் சென்றார். அதேபோல், திரும்பவும் வந்து நிகழ்ச்சியில் எங்களுடன் கலந்து கொண்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அன்று இரவு நிகழ்ச்சி முடித்து, எல்லாரும் ஒரே காரில் தான் வீட்டுக்கு கிளம்பினோம். அனிருத் தான் எங்களை காரில் டிராப் செய்தார்; இது தான் நடந்தது. எங்களுக்குள் உள்ள நட்பு அப்படியே தான் இருக்கு. ஏன் இதை வேறு மாதிரி, திரித்து பெரிதுபடுத்துகின்றனர் என்று தெரியவில்லை. என் பிறந்தநாளுக்கு, முதலில் வாழ்த்தியவர் தனுஷ் சார் தான்.

மீண்டும், 'டிவி' நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தால்?

சினிமாவில் இப்போது தான், கொஞ்சம், கொஞ்சமா நிலையான இடத்தை பிடிக்க முயற்சிக்கிறேன். நடிகன் என்ற கூடுதல் 'இமேஜ்' வந்திருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி என்னை தயார்படுத்த வேண்டும். இதுபோன்ற சில விஷயங்களில், 'டிவி' நிகழ்ச்சி செய்வதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். இப்போதைக்கு, 'டிவி' நிகழ்ச்சி செய்யும் ஐடியா இல்லை.

நீங்க, சந்தானம் எல்லாம், 'டிவி'யிலிருந்து சினிமாவுக்கு வந்தது, மற்றவர்களுக்கு

நம்பிக்கை கொடுத்திருக்கே...

'டிவி'யிலிருந்து சினிமாவுக்கு வருபவர்களின் பட்டியல் இப்போது கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இன்னும் ஏராளமானோர் வருவாங்க. மற்ற மாநிலங்களை சேர்ந்த, 'டிவி' நடிகர்கள் கூட, எங்களின் பெயர்களை சொல்கின்றனர். நாங்கள் மேல மேல போகும் போது தான், இவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். இனி சின்னத்திரை, பெரிய திரை என்ற பிரிவு இருக்காது என, நினைக்கிறேன்.

Post a Comment

 
Top