0
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தமது உறுப்பினர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார் சங்க தலைவர் தாணு. நாங்களே தினமும் 100 பேருக்கு சாப்பாடு போடுறோம்… எங்களுக்கு எதுக்கு இலவச சாப்பாடு? என்று ஒரு சில தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தாலும், பசித்தவர்களின் குரலாக நின்று இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் அவர். அம்மா அன்னம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது இந்த திட்டத்திற்கு. இசையமைப்பாளர் இளையராஜா இந்த இவ்விழாவை துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது-

“‘தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியார் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி என்று தோன்றும். ‘சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற கூறியிருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றும் சொல்லிவிட்டார். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.

‘சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு அங்கு சேர்ப்பீர்’ என்று பாடியிருக்க வேண்டும். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போட வேண்டும் என்று தான் பாடியிருக்க வேண்டும். ஜகத்தினை எதற்கு அழிக்க வேண்டும். இயற்கைத் தான் விழைத்துக் கொட்டுகிறதே.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் உணவு அளிப்போம் என்ற திட்டம் பாராட்டப்படக்கூடிய திட்டம். நான் செய்கின்ற விஷயங்களை சொல்வதற்காக இங்கு வரவில்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து செய்யும் விஷயம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

எல்லோரும் பசியோடு தான் வந்தோம். பட்டினியோடு வரவில்லை கலைப்பசியோடு வந்தோம். என்னோடு இருந்த நண்பர்கள் எல்லாம் என்னை திட்டுவார்கள். என்னடா இவன் சிரிச்சுக்கிட்டே வர்றான் என்று எனது நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். பசி எங்களுக்கு துன்பமே இல்லை. சந்தோஷமாக இருந்தோம்.

அந்த சந்தோஷம் இப்போது பெயர் பெற்றவுடன் இருக்கிறதா என்றால் இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் எல்லாம் அதே குணங்களோடு இறந்துப் போய்விட்டார்கள். அவர்கள் இறந்து போவதற்கு காரணமாக இருந்தது இந்த பெயரும், புகழும், பணமும். மனித மனத்தைக் கொல்லக்கூடிய இவை அனைத்தும் நமக்கு தேவையா?

தயாரிப்பாளர்கள் படம் மட்டும் தயாரிக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கதைகள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் தயாரிக்கிறீர்கள். இத்தனையும் தயாரித்து ஒற்றுமையில்லாமல் இருந்த தயாரிப்பாளர் சங்கம், இப்போது இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே’ என்று மட்டும் பாடவில்லை. ‘அம்மான்னா சும்மா இல்லைடா’ என்றும் பாடியிருக்கிறேன். அம்மாவின் இந்த உணவுத் திட்டத்தை என்னை தொடங்கி வைக்கச் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்னதானம் உலகமெங்கும் பரவட்டும். பசிக்கு உணவளிக்கும் உலகத்தை உருவாக்குவோம்” என்று இளையராஜா பேசினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு பேசிய போது, “1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவுக்கு வடஇந்தியா, தென் இந்தியா மிரளும் வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்துவது என்று சபதம் ஏற்கிறேன்” என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், பெப்சி அமைப்பினர் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top