0
இன்றைய தேதியில் ரசிகர்களால் ஆ……………….வலோடு எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் காக்கி சட்டை!

சிவகார்த்திகேயன் என்ற மந்திரச்சொல் மட்டுமே காரணம் என்றாலும், வேறு பல விஷயங்களும் காக்கி சட்டை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

‘எதிர்நீச்சல்’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் துரை செந்தில்குமார், தயாரிப்பாளர் தனுஷ் கூட்டணியின் அடுத்தப் படம் என்பது அவற்றில் ஒன்று.

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் ‘காக்கி சட்டை’ படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

வேலையில்லா பட்டதாரியை வாங்கி வெளியிட்ட கைராசிக்காரர் இவர்.

இதுபோன்ற புற காரணங்கள் ஒரு பக்கம் இருக்க…

காக்கி சட்டை படத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இதுவரை, ஒரு மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்த சிவகார்த்திகேயன், காக்கி சட்டை படத்தில் கோட்டுக்கு இந்தப்பக்கம் வந்திருக்கிறார்.

அதாவது, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த ஆறு படங்களிலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களையே ஏற்றுள்ளார்.

முதன்முறையாக, காக்கி சட்டை படத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

நேரம் காலம் பார்க்காமல் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து, போலீஸ் கேரக்டருக்கு ஏற்ப தன் பாடியை ஃபிட்டாக்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அப்பா காவல்துறையில் எஸ்.பி.யாக பணியாற்றியவர்.

எனவே காக்கி சட்டை படத்துக்காக போலீஸ் யூனிஃபார்மை அணிந்தபோது உண்மையில் சிவகார்த்திகேயன் சற்று உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்பது நம் யூகம்.

சிவகார்த்திகேயனிடம் கேட்டோம்…

”ஆமாம். போலீஸ் யூனிஃபார்மை அணிந்தபோது அப்பாவின் நினைவுகள் கிளறி என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவை போலீஸ் யூனிஃபார்மில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். போலீஸாக அவர் பணிபுரிந்து, இறக்கும் வரையிலும் நேர்மையான அதிகாரியாக இருந்தவர். அவ்வளவு சுலபமாக அவர்மீது யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. நேர்மையாக இருக்கும் ஒருவரின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவாங்க. அப்பாவோட அந்த நற்குணங்கள்தான் என்னை இந்தப் படத்தில் ஈஸியாக இணைத்துக்கொள்ள வைத்தது.”

என்று நெகிழ்ச்சியாக சொன்னார் சிவகார்த்திகேயன்.

கஞ்சிபோட்டு அயர்ன் பண்ணியது போல்…. காக்கி சட்டை அணிந்து சிவகார்த்திகேயன் விறைப்பாக நிற்கும் விளம்பரங்களை எல்லாம் பார்க்கும்போது…

காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் கமிஷ்னராகவோ… அஸிஸ்டெண்ட் கமிஷ்னராகவோ நடிக்கிறார் போலிருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா?

உண்மையில்… ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில்தான்.

விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிள்! 

Post a Comment

 
Top