0
வங்கி கணக்கில் வைப்பு நிதி ரூ.5500 கோடி
4.3 டன் தங்க நகை வங்கியில் முதலீடு
லட்டு பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.150 கோடி
தலைமுடி விற்பனை மூலம் ரூ.200 கோடி
தினமும் லட்சம் பக்தர்கள் தரிசனம்!
தேவஸ்தானத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள்
ஆண்டு பட்ஜெட் ரூ.2500 கோடி திருமலை ஏழுமலையான் நம்பர் ஒன் பணக்கார கடவுள்களில் ஒருவர்!
உண்டியல் வருமானம் ரூ.950 கோடி
சிறப்பு தரிசனங்கள் மூலம் ரூ.185 கோடி

 நம் நாட்டு மக்களுக்கு இது தெரியாது. ஆனால் உலக பணக்கார கடவுள்களின் வரிசையில் ஏழுமலையான் பெயர் முன்னிலையில் உள்ளது. மேலும் கடவுள்களில் பணக்கார கடவுள் யார் என்று கணக்கிட்டால் மட்டும் கட்டாயம் ஏழுமலையான் பெயர் நம்பர் ஒன்னில் உள்ளது. வேறு எந்த உலகப் பதிவுகளும் ஏழுமலையான் ரிக்கார்டை தகர்க்க முடியாது. மேலும் ஏழுமலையான் சொத்து விவரம் அவருக்கே தெரியாது.

 அவரிடம் எத்தனை கட்டடங்கள், எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன. சரியான கணக்குகள் இல்லை. ஆனால் பல கோடி சொத்துகள் அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. நமக்கு தங்க நகை கிராம் கணக்கில் தெரியும். ஆனால் ஏழுமலையானிடம் டன் கணக்கில் உள்ளது. அவரிடம் உள்ள கட்டங்களின் வாடகைகள், வைப்பு நிதி, காலண்டர், டைரி விற்பனை, லட்டு விற்பனை மட்டுமல்லாமல் பக்தர்கள் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் தலைமுடியும் அவருக்கு செல்வத்தை குவிக்கிறது.

வைப்பு நிதி ரூ.5500 கோடி

     ஏழுமலையான் வங்கி கணக்கில் பல நாட்டு கரன்சிகள் ரூ.5500 கோடி உள்ளது. இதற்கு வட்டி மட்டுமே 2013-14ம் ஆண்டிற்கு ரூ.555 கோடி பெறப்படுகிறது. மேலும் 2001ஆம் ஆண்டிற்கு முன் ஏழுமலையான் வைப்பு நிதிகள் மேல் பெரிய வருமானம் கிடைக்கவில்லை. அந்நாட்களில் தேவஸ்தான நிதி நிலை அறிக்கையில் சில்லரை கணக்காக மட்டுமே வட்டி காண்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிற்கு பின் தலைமுடி விற்பனை, பிரசாதங்கள் விற்பனை, வாடகைகள் அனைத்தும் சேர்த்து கணக்கிட்டால் ரூ.40 கோடி மட்டுமே வருமானமாகப் பெறப்பட்டது. என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்த போது சிறப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி 1985 முதல் ஏழுமலையானுக்கு கிடைக்கும் வருமானத்தை நிரந்தர வைப்பு நிதியாக பல தேசிய வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டது. இந்த வட்டி ஆண்டுக்காண்டு உயரும் போது ஏழுமலையான் சொத்தும் உயர்ந்து கொண்டே உள்ளது. 2010-11ல் ரூ.366.85 கோடி  2011-12ல் ரூ.412-13 கோடி  2012-13ல் ரூ.490 கோடி  2013-14ல் ரூ. 550 கோடி கிடைத்தது. இது 2014-15ல் ரூ.620 கோடியை தொடும்.

அட்சய பாத்திரம்

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அட்சய பாத்திரம் ஏழுமலையானின் உண்டியல். ஒரு சில்லரை நாணயமாக முடிப்பு கட்டி அதை கொண்டு வந்து போடும் ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை தினசரி கணக்கிட்டு அதை வங்கியில் வரவு வைக்கின்றனர். 1975ஆம் ஆண்டுக்கு முன் உண்டியல் வருமானம் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. 1975-76க்கு பின் ஏழுமலையான் உண்டியலின் வருட ஆதாயம் ரூ. 5.84 கோடி. ஆனால் தற்போது ஏழுமலையானின் தினசரி வருமானம் சுமார் ரூ.3 கோடி. 1985-86ல் ரூ. 15.86 கோடி  1995-96ல் ரூ.85.06 கோடி  2005க்கு பின் தினசரி கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. அதற்கடுத்த 8 ஆண்டுகளில் அது 3 மடங்கு அதிகரித்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ200 கோடி அதிகரித்தது. 2010-11இல் ரூ.675.85கோடி  2011-12ல் ரூ.782.23 கோடி  2012-13ல் ரூ.859 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. மேலும் கடந்த ஆண்டு தெலுங்கானா பிரச்சனை காரணமாக உண்டியல் வருமானம் சரிவைக் கண்டது. இல்லையென்றால் கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தேவஸ்தானம் எதிர்பார்த்திருந்தது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நாள் மட்டும் ரூ.5 கோடி உண்டியல் மூலம் வருமானமாக கிடைத்தது.

நிதி நிலை அறிக்கை

    பல நூற்றாண்டு வரலாறு கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 17வது நூற்றாண்டு முதலே நிதிநிலை அறிக்கை போடப்பட்டு வருகிறது. மன்னர்கள் காலம் தொடர்ந்து ஜமீன்தார்கள், மஹாந்த் காலம் வரை நிதிநிலை அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பின் 1954ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்ட காலத்தில் முதல் நிதி நிலை அறிக்கை ரூ.20 லட்சத்து 70 ஆயிரத்து 358. 1954-55லிருந்து ஒவ்வொரு 10 ஆண்டிற்கு கணக்கிட்டால் பல கோடிகளில் நிதிநிலை அறிக்கை உயர்ந்துள்ளது. 1966-67ஆம் ஆண்டு ரூ20 லட்சமாக இருந்த பட்ஜெட் 304 லட்சமாக உயர்ந்தது. 1975-76இல் அது இரண்டு மடங்காக உயர்ந்தது. 1985-86களில் அது 6 மடங்கு உயர்ந்தது. அதனால் கடந்த 20 ஆண்டுகளில் யூகிக்க முடியாத அளவில் பட்ஜெட் உயர்ந்தது. 1995-96இல் ரூ.173.25 கோடியாக இருந்தது. 2005-06இல் ரூ.673 கோடி. ஆனால் தற்போது ரூ.2248 கோடிக்கு உயர்ந்துள்ளது.

    இது மட்டுமல்லாமல், மன்னர்கள் காலம் முதல் ஏழுமலையானுக்கு அளிக்கப்பட்ட தங்க நகைகள் மட்டும் 4.3 டன் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வட்டியாக தங்கத்தையே திரும்பப் பெறும்படி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்க நகையும் ஆண்டுக்காண்டு உயர்நது வருகிறது. மேலும் ரகம் வாரியாக தரம் பிரித்து இணையதளம் மூலம் பக்தர்கள் சமர்பிக்கும் தலைமுடி விற்பனை என ஏழுமலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் வாடகை அறைகள், கல்யாண மண்டபங்கள் என தினமும் பல கோடி வருமானமாகப் பெறப்படுகிறது.

    இவ்வாறு ஏழுமலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழுமலையானின் சொத்து விவரங்களின் பதிவை யாராலும் தகர்க்க முடியாது. அதனால் உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுளாக ஏழுமலையான் இருப்பதில் ஐயமில்லை.

Post a Comment

 
Top