0
சினிமாவுல ஜெயிக்கணும்னா திறமையும் உழைப்பும் மட்டும் இருந்தா பத்தாது, அதிர்ஷ்டமும் இருக்கணும் என்று நிறைய பேர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலும் இது சினிமாவில் நீண்ட நாட்களாக இருப்பவர்களின் திருவாய்மொழியாகவும், நீண்ட நாட்களாக சினிமாவில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்களின் தெருவாய்மொழியாகவும் இருக்கும். அதிலும் முக்கியமாக சினிமாவில் பெரும் முயற்சி செய்து தோற்றுப்போனவர்களும், சினிமாவால் கைவிடப்பட்டவர்களும், வெற்றியா தோல்வியா என்று பரிட்சித்துப்பார்க்க, முயற்சி செய்து பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போராடிக்கொண்டிருப்பவர்களின், அலைந்து கொண்டிருவர்களின் மனக்குரலாக இருக்கும். மனக்குமுறலாகவும் இருக்கும். சமயத்தில் முயற்சியே செய்யாதவர்களின் வெத்துப்பிளிறலாகவும் கூட இருக்கும்.

ஆமா, இந்தக்கட்டுரையோட ஆரம்ப வரிகள் உண்மை தான் என்று மேற்சொன்னவர்களோடு சேர்ந்து இன்னும் நிறைய பேர் சொல்வதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரமாதமான உதாரணமாக ஒருவகையில்(???!!!) சிவகார்த்திகேயன் இருக்கிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வளர்ச்சி. பக்கா பிளான் எழுச்சி.

15 வருடமாக ஒருகதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் போராடினேன் என்று சொல்கிற “இயற்கை” ஜனநாதன்களும், ஹீரோவாக வாய்ப்புகள் கிடைக்காததால் அப்போது ஹீரோவாக இருந்த சிலருக்கு டப்பிங் பேசிய “சீயான் விக்ரம்”களும், திறமைசாலியாக இருந்தும் வெற்றிதேவதையை திரும்பி பார்க்க வைக்க முடியாமல் நொந்து நொடித்து மீண்டு வந்தாலும் மீளாத “தினம்தோறும் நாகராஜ்”களையும், பெரிய பின்புலம் இருந்தாலும் முன்னுக்கு வரவேமுடியாமல் முனகி முனகி இனிமேல் முடியாதோ என்று ஓய்ந்திருக்கும்போது திடீரென ரசிக கூட்டத்திற்கு மத்தியில் ஆனந்தமாக அழ வாய்ப்புக்கிடைத்த “அருண்விஜய்”களும்…. இதுபோல இன்னும் எத்தனை எத்தனையோ பிரமாத்மாக்களின் ஆத்மாக்களை சிங்காரச்சென்னையும் சீர்மிகு தமிழ்சினிமாவும் இன்றும் செரிமானம் செய்து கொண்டே இருக்கிறது.

இப்படியாக வரலாறுகளாக மாறாமல் வாடிப்போகும், பல வரலாறுகள் இங்கே இலட்சக்கணக்கில் இருக்கலாம். இந்தக்கதைகளைப்பற்றி தெரிந்தவர்களும், புரிந்தவர்களும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியோடு அதிர்ஷ்டத்தையும் முடிச்சுப்போடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தான்.

சிவகார்த்திகேயனின் “கட் டூ கட்” சினிமா வளர்ச்சி போல, சிவகார்த்திகேயனின் கதையையே அதிவேகமாக ஜெட் வேகத்தில் சொல்லிவிட முடியுமா என ஆசைப்பட்டதே இந்தக்கட்டுரையின் முதல் புள்ளி.

கும்பகோணத்திற்கு அருகில் சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்த சிவகார்த்திகேயனின் அப்பா, காவல்துறையில் அதிகாரி. சினிமா அப்பா போலவே கண்டிப்பானவர், ஆனால் பாசக்கார அப்பா. பாசக்கார அம்மா. ஒரு அக்கா. அழகான சின்ன குடும்பபம். அப்பாவின் பணியிட மாற்றம் அடிக்கடி நிகழ்ந்தது சிவகார்த்திகேயனுக்குள் ஒரு வெறுமையையும் தனிமையையும் உண்டாக்கியது. அடிக்கடி ஊர் விட்டு ஊர் மாறியதில் எந்த ஊரிலும் நெருக்கமான நண்பர்கள் இல்லாமல், அதையும் மீறி கிடைத்தாலும் தொடரமுடியாத இடமாற்றம்… ஒரு கட்டத்தில் சிவாவை புதிய நண்பர்களை தேடவைக்காமல் முழுமையாக தனிமைக்குள் தள்ளியதாம். அதனால் தனியாக, தனியறைக்குள் விளையாடிய சிவா, மொத்தமாக ரிசர்வ்டு டைப்பாக மாறிவிட்டாராம். அதனால் தான் இன்றும் சினிமாவில் நிறைய நண்பர்கள் இல்லாமல், அதே டைப் கேரக்டரும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று ‘கேள்விப்பட்டவை’ சொல்கிறது.

கடைசியில் திருச்சிக்கு மாற்றலான அப்பாவின் வேலையால், திருச்சியில் என்ஜீனியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். மீண்டும் அப்பாவின் வேலை கோயம்புத்துருக்கு மாற்றம். ஆனால் குடும்பம் திருச்சியிலேயே இருக்கிறது… முதலாண்டு கல்லூரி மாணவனான சிவா வாழ்வின் முதல் பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறார். கோயம்புத்தூரில் இருந்து குடும்பத்தை பார்க்க ஆசையாக, பாசமாக கிளம்பிய சிவாவின் அப்பா, வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிகிறார். இதேதும் அறியாமல், அப்பா வந்திருப்பார் என்று ஆசையோடு வீட்டுக்கு வந்த சிவாவை வரவேற்றதோ பிணமாக படுக்கவைக்கப்பட்டிருந்த அப்பா…

பிரிவால்… மனமுடைந்த சிவகார்த்திகேயன், ஒருவழியாக கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு எம்.பி.ஏ படிக்க வந்தார். சென்னையில் நாட்கள் ஓடியது. அந்த நேரத்தில்… விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு, சீசன் 2” போட்டியாளர்கள் தேர்வு நடந்தபோது, கல்லூரியில் சிவா மிமிக்ரி செய்து திறமை காட்டியதை நினைவு வைத்திருந்த நண்பர்கள் உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார்கள். “கலக்கப்போவது யாரு சீசன் 2 டைட்டில் வின்னரானார் சிவா. சீசன் 3க்கான காம்பியரிங் கிடைக்காத வருத்தத்தில் இருந்த சிவாவை சூப்பர் சிங்கரும், ஜோடி நம்பரும், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளும் அடுத்தபடிக்கு அழைத்துச்சென்றது. “அது இது எது”… நிகழ்ச்சியில் சிவா இன்ஸ்டன்டாக மற்றவர்களை கலாய்த்தது இன்னும் களைகட்டியது. சிவாவை மக்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள்.

இன்னொரு பக்கம் குறும்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் சிவா. ராஜாராணி இயக்குநர் அட்லீ, சிவாவின் நண்பர். அதனால் அட்லீயின் குறும்படம் முகப்புத்தகத்தில் சிவாவை நடிக்க வைத்தார். வேறு சில குறும்படங்களிலும் நடித்தார். இப்படியாக 2008ம் ஆண்டில் சின்னத்திரைக்குள் வந்த சிவகார்த்திகேயன் மீது, 2012ம் ஆண்டு வெள்ளித்திரை வெளிச்சம் படுகிறது.

“வாகை சூட வா” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியபோது, பாண்டிராஜ்க்கு ரொம்பவே பிடித்துப்போனதால் தனது “மெரினா” படத்தில் கதாநாயகனாக்கினார். மெரினா படத்தில் சிவகார்த்திகேயன், புதிதாக எதையும் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் அசல் சிவகார்த்திகேயனாகவே வரவைத்தார் பாண்டிராஜ். மெரினா படத்தில் நடித்த அதே 2012ம் ஆண்டில் “3” படத்தில் தனுஷின் நண்பனாகவும் நடித்தார். பெரிதாகவும் சிறிதாகவும் இல்லாமல் இருந்த சிவகார்த்திகேயனின் என்ட்ரி, வலு சேர்க்க வந்து சேர்ந்தது “மனம்கொத்திப் பறவை”. ஒரு புதுமுக அறிமுக நடிகனுக்கு ஒரே ஆண்டில் 3 படங்கள் வெளியானது, நிறைய பேரின் பார்வையை சிவா பக்கம் திருப்பியது.

2013ம் ஆண்டு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் “கேடி பில்லா, கில்லாடி ரங்கா” அதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் தன்னுடைய காட்ஃபாதர் என்கிற ரேஞ்சுக்கு சிவா சொல்கிற தனுஷின் தயாரிப்பில், எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனுஷ் தயாரிக்கும் படத்தில் இன்னொரு நடிகர், அந்த நடிகர் சிவகார்த்திகேயன்.. என்பது சிவாவுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆச்சர்யமான விஷயமாகிறது. எதிர்நீச்சலடிக்க வேண்டிய தேவையே இல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு வெற்றிக்கப்பல் தருகிறது “எதிர்நீச்சல்”.

பரவாயில்லையே இந்தப்பையன், நல்லா வந்துருவான் போல இருக்கே…. என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளியாகிற “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” வசூலை வாரிக்கொட்டி வடை பாயாசத்தோடு தலைவாழை இலை விருந்து வைக்கிறது சிவகார்த்திகேயனுக்கு. இதே 2013ம் வருடத்தில், நண்பன் அட்லீ இயக்கிய ராஜாராணி படத்தில் ராஜாவாக நடித்திருக்க வேண்டிய சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ஆர்யா நடித்தார். ராஜா மாறியதற்கு காரணம் ராணித் தோழிதான் என்பதாக சாலிகிராமத்தின் ஜன்னல்கள் சொல்கிறது.



2012ல் மூன்று படங்கள், 2013ல் மூன்று படங்கள்… 3வது வருடமான 2014ம் வருடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிற ஏழாவது படம் “மான் கராத்தே”, படத்தின் பட்ஜெட் அவருடைய முந்தைய படங்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்கிறது. அவருடைய முந்தைய மெகா ஹிட் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஹன்சிகா மோத்வானி கதாநாயகி… பட்ஜெட் மட்டுமல்லாது சிவகார்த்திகேயனின் சம்பளமும் இரட்டை இலக்கத்தில் என முன்னணி ஹீரோக்களின் வரிசைக்கு வடம் பிடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

வ.வா.ச படம் அளவுக்கு மான் கராத்தே சோபிக்கவில்லை, கூடவே சிவகார்த்திகேயனைச்சுற்றி சர்ச்சைகள், சங்கிலி கட்ட ஆரம்பிக்கிறது . இவ்ளோ சம்பளமா என்ற குரல்கள் ஒருபக்கம், சிவப்பு பிரமாண்ட கம்பெனியின் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தவர், இப்போது பழைய சம்பளம் பத்தாது இன்னும் பலகோடிகள் வேண்டும் என்றதால் கழட்டிவிடப்பட்டார் என்று தகவல்கள் இன்னொரு பக்கம், பத்திரிகையாளர்கள் போன் செய்தால் கூட போன் அட்டெண்ட் பண்ணுவதில்லை, அட்டெண்ட் பண்ணிலாலும் பிரயோஜனம் இல்லை… இது ரொம்ப ஓவர், வௌங்காது என்று முணுமுணுப்புகள் துணு துணுக்குகள் வந்தாலும்… அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாக்கியது, சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு. மீண்டும் தனுஷ் தயாரிக்க, எதிர்நீச்சல் படத்தின் இயக்குநர் துரைசெந்தில் குமார் இயக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் காக்கிசட்டை படத்தின் அறிவிப்பு வெளியாகிறது.

பரபரப்பு பற்றிக்கொள்கிறது… இடையில் பட்டதாரிப் பார்ட்டி சர்ச்சை பரபரப்பை மீறிப் படபடக்கிறது… காட்ஃபாதரோடு கசமுசா என்று கிளம்பியது காட்ஃபாதரையும் மற்றவர்களையும் கிறுகிறுக்க வைத்தாலும் சிவகார்த்திகேயனுக்கும் அவரது வளர்ச்சிக்கு அந்தப் பார்ட்டி கிளுகிளுப்பு கூட்டுகிறது. கறுவிய காட்ஃபாதர் வஞ்சம் தீர்க்க எடுத்த ஆயுதம் தான் விஜயசேதுபதி, மற்றும் ராஜாவை மாற்றிய ராணி ஜோடியாக நடிக்கும் நானும் ரவுடி தான், படம் என்று இன்னொரு பட்டாசு வெடிக்கிறது. இந்தப்பட்டாசும் பப்ளிசிட்டி என்கிற வகையில் சிவகார்த்திகேயனின் வீட்டு வாசலில் தவுசண்ட் வாலாவாக வெடிக்கிறது.

அவர் இவரை மாதிரி இல்லை, இவர் அவரை மாதிரி இல்லை… என்கிற இரண்டு துருவங்கள் போட்டிக்குள் இருப்பதாக கொளுத்தப்பட்ட திரி எரியவில்லை என்றாலும் புகைந்துகொண்டே இருக்கிறது. அவரின் வளர்ச்சிக்காக மத்தவங்க பிளான் பண்ணாக்கூட அவர் ஏத்துக்கிறதில்லை, சம்மதிக்கிறதில்லை… ஆனா, வளர்ச்சிக்காக பிளான் பண்றதையே பெரிய புராஜக்டா செய்கிறவர் இவர்… என நியூஸ் நியூஸ்… அத்தனையும் யூஸ்… யூஸ். அதிலும் சிவா கடைசியாக கொண்டாடியதாக சொல்லப்படும் பார்ட்டிக்கான காரணத்தை அறிந்தால்…. அது மரண மாஸ். பிளான் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால்… சிவகார்த்திகேயன் என்கிற தமிழ் நடிகர்…. “வெற்றித் தளபதி” என்றும் அழைக்கப்படுகிறார்… தமிழ் விக்கிபீடியாக்காரர் வாயால்…சொல்ல வைக்கிற அளவுக்கு. (விக்கிபீடியாக்காரர் சொல்லித்தான் இந்த மேட்டரே எனக்கு தெரியும்.)

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் என்ற வரிசையில் கடைசியாக உள்ள இரண்டு பேரும் கிட்டத்தட்ட திசை மாறி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். இப்போது அந்த வரிசையின் கடைசி காம்பினேஷனாக சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி இருக்கிறார்கள் என்று சொன்னால் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.

போதுமான அளவுக்கு உயரம், பக்கத்து வீட்டுப்பையன் சாயல், குழந்தைகளுக்கும் பிடிக்கிற மாயம்… என சிவகார்த்திகேயனின் சினிமா எதிர்காலம் என்பது ரைட்டாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் பிரைட்டாகவே இருக்கிறது. அதனால் தான் 3 வருடங்களே ஆகி இருந்தாலும், ஏழு படங்களே வெளியாகி இருந்தாலும் 10கோடி சம்பளத்தை சிவகார்த்திகேயனால் சாதாரணமாக கேட்கமுடிகிறது.

ஆனால், சர்ச்சைகளின் சங்கீதம் எப்போதும் இனிய இசையாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே சர்ச்சைகளை தேடி அலைவதும், அப்படியே விட்டுவைப்பதும்… அடிவேரில் அடுப்பு மூட்டலாம். அதைப்போல நாடாண்ட நடிகர்களில் இருந்து… வீடாண்ட நடிகர்கள் வரை… ஊடகங்களோடும் ஊடகத்துறையில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் நிருபர்களோடும் ஒரு பாச உறவை மெனக்கெட்டு வளர்த்தார்கள். வளர்ப்பார்கள். வளர்க்கிறார்கள். சிலர் அதை பாசாங்காகவே செய்தாலும்… பட்டைய கௌப்பினார்கள். அவரவருக்கென்று தனிப்பட்ட ஊடக செல்வாக்கு என்று ஒன்று இருந்திருக்கிறது. அவர்களின் படங்களின் வெற்றி, தோல்வியைத் தாண்டி… அந்த செல்வாக்கு அவர்களின் செல்வாக்காகவே தொடர்ந்திருக்கிறது.

ஆனால், சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை, அவரின் ஊடக செல்வாக்கு என்பது… அவர் சம்பந்தப்பட்ட படங்களின் செல்வாக்காக, அதன் வெற்றி தோல்விகளின் செல்வாக்காகவே இருப்பது போல தோன்றுகிறது. பத்திரிகையாளர்களிடமே எனக்கு உதவியாளர்கள் கிடையாது, மேனேஜர் கிடையாது… அதனால் என் போனை என்னைத் தவிர வேறு யாரும் அட்டெண்ட் பண்ண மாட்டார்கள் என்று அள்ளி விட்டு… சுமாராக இருக்கிற செல்வாக்குச் சுவரில் இருந்து இன்னும் சில செங்கல்களை உருவி இருக்கிறார் சிவா. அடுத்தடுத்த செங்கல்கள் விழாமல் கவனிக்கவேண்டியது மிக அவசியம்.

எது எப்படி இருந்தாலும்…. சிவகார்த்திகேயனின் 8வது படமாக வெளிவரும் “காக்கி சட்டை”, ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், வழக்கமாக காமெடி களி கிண்டி கரகாட்டம் ஆடிய சிவகார்த்திகேயன், இதில் ஆக்ஷனின் இறங்கி அதிரடி ஆட்டமும் போடப்போகிறார் என்கிற புரட்சித் தகவல். “அண்ணா…. என்னங்ணா…. இது நம்ம சட்டை மாதிரியே இருக்குதுங்ணா” என்று சொல்ல வைக்கிற சட்டையாக இந்த “காக்கி சட்டை” இருக்கும் என்று தெரிகிறது. அது அடுத்த கிளுகிளுப்பாக இருக்கலாம். இதை நீங்கள் வாசிக்கும்போது காக்கிச்சட்டையின் ஃபிட்னெஸ் மற்றும் பிஸினெஸ் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்காலத்தின் கூட்டல் கழித்தல் கணக்கை எழுதக்கூடிய பேனாவும், நோட்டும் நம்மிடம் இல்லை… அதை எழுதும் அறிவும் நமக்கில்லை. எனவே காலத்தோடு நாமும் காத்திருப்போம்.

Post a Comment

 
Top