0
மான் கராத்தே படத்தில் மல்லாக்க விழுந்ததற்கு அப்புறம் சிவகார்த்திகேயன் சிக்ஸர் அடிக்க முயன்றிருக்கும் திரைப்படம், கமல் நடித்த காக்கிசட்டை டைட்டிலேயே கொண்டு வௌிவந்திருக்கும் திரைப்படம்., வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் படம், எதிர்நீச்சல் வெற்றிப்பட இயக்குநர் உள்ளிட்ட டீம் மீண்டும் இணைந்திருக்கும் படம், எல்லாவற்றுக்கும் மேலாக இப்பட தயாரிப்பாளர் நடிகர் தனுஷே, இப்படத்திற்கு எதிர்ப்பு என வதந்தியை கிளப்பிய படம்... என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் காக்கி சட்டை.

கமலின், காக்கி சட்டைக்கும், கார்த்திகேயனின் காக்கி சட்டைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அதில், கமலின் அப்பா போலீஸ், இதிலும் சிவகார்த்திகேயனின் அப்பா போலீஸ்... பழைய காக்கிசட்டையில், கமல் எல்லா தகுதிகள் இருந்தும் போலீஸ் வேலை கிடைக்காமல் போலீஸ் போன்று செயல்பட்டு, சமூக விரோதிகளை களையெடுப்பார். இதில் கான்ஸ்டபிளாக காக்கி சட்டை மாட்டிக்கொண்ட(பல சீன்களில் ரகசிய போலீசாக கலர் சட்டையிலேயே...) சிவகார்த்திகேயன், பெரிய போலீஸ் ஆபிஸராக வரும் ஆசையில், இன்டர்நேஷனல் லெவல் உடல் உறுப்பு திருட்டு கூட்டத்தை அடையாளம் கண்டு, அந்த கூட்டத்தை கூண்டோடு கைலாசம் அனுப்பி, தான் நினைத்த மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவதும், அதற்கு கதாநாயகி ஸ்ரீதிவ்யா எவ்வாறு உதவுகிறார்.?, போலீஸ் வேலை என்றால் வேண்டாம் என சொல்லும் ஸ்ரீதிவ்யா குடும்பம், அதன்பின் எப்படி சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் காதலுக்கு சம்மதம் தருகிறது...? என்பதும் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி காக்கி சட்டை-யை கலர்புல் சட்டையாக தந்திருக்கிறார்கள்! லாஜிக் பார்க்காமல் போனால் கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயன் செய்யும் கமர்ஷியல் மேஜிக்குகளை ரசித்துவிட்டு திரும்பலாம்.

சிவகார்த்திகேயன்-மதிமாறனாக கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் கான்ஸ்டபிளாக இருந்து கொண்டு செய்யும் காரியங்கள், போலீஸ் கமிஷனர் லெவலுக்கு இருப்பது தான் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் முன்பாதியில் சிவா, ஸ்ரீதிவ்யாவின் காதலுக்காக தான் போலீஸே இல்லை... என்று என்பது உள்ளிட்ட காதல் கலாட்டாக்கள் சுவாரஸ்யம். வில்லனிடம் சிவகார்த்திகேயன், ஒருத்தன், பெற்ற அம்மா-அப்பா, நல்ல நண்பன், நேர்மையான போலீஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பணத்தால் வாங்க முடியாது... என பேசும் பன்ச் டயலாக்குகள் ஆகட்டும், இன்னும் பல காமெடி பஞ்ச்கள் ஆகட்டும் அனைத்திலும் சிவகார்த்தி, மிடுக்காகவும், துடுக்காகவும் மிளிர்கிறார். ஸ்ரீதிவ்யாவை காபந்து செய்ய வில்லன்களுடன் மோதும் பைக் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.

ஸ்ரீதிவ்யா, எங்க வீட்டுக்குத்தான் உங்க போலீஸ் வேலை பிடிக்கல, எனக்கு பிடிக்கலேன்னு சொன்னேனா...?! என பேசும் காதல் மொழிகள், சிவகார்த்திகேயனை மட்டுமல்ல ரசிகர்களின் இதயங்களிலும் லவ் பல்ஸை எகிற வைக்கிறது. பாடல் காட்சிகளில், ஸ்ரீதிவ்யா-சிவகார்த்திகேயனின் நெருக்கம், இவர்களது முந்தைய படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை காட்டிலும் கூடுதலாக இருப்பது வலு சேர்த்திருக்கிறது. அதில்(வ.வ.சங்கம்) படத்தில் பொறுக்கியாக இருந்து ஸ்ரீதிவ்யாவை டாவடித்த சிவகார்த்தி, இதில் போலீஸாக சட்டத்தை, தன் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருப்பதால் நெருக்கம் சற்றே கூடுதலாக்கும்.!

போலீஸ் இன்ஸ்ஸாக வந்து பாதியிலே உயிரை விடும் வரும் பிரபு, தன் கொடூர செய்கைகளால் விரட்டி விரட்டி மிரட்டும் ஆள்கடத்தல் பேர்வழி வில்லன் துரை, சம்பத்ராம், மயில்சாமி, சிவகார்த்திகேயனின் யதார்த்த அம்மாவாக வரும் கல்பனா, விஜய் ராய், திலீப், ரயில் ரவி, ஈ.ராம்தாஸ்... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மாமா மனோபாலாவின் எபிசோடு, அவரது எம்.எல்.ஏ. ஆசை மாதிரியே படத்திற்கு இன்னும் நீளம் வேண்டி சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தேவைதானா.?!

பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், தங்கள் பட நாயகர்களுக்கு ஒரிஜினல் பெயரை சூட்டி அழகு பார்ப்பார்கள், ஆனால் இப்பட இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார், கொடூர வில்லனுக்கு துரை என பெயர் சூட்டியிருப்பது ஏனோ.?

அனிருத்தின் இசையில், பாடல்கள் ஒவ்வொன்றும் புது ர(ரா)கம். எம்.சுகுமாரின் ஔிப்பதிவில் உள்நாட்டு லோகேஷன்களும், அயல்நாட்டு லோகேஷன்களும் அழகு ஓவியமாக தெரிகிறது. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், காக்கி சட்டைக்கு கவசமாக இருக்கிறது.

துரைசெந்தில் குமாரின் இயக்கத்தில், ஒரு கான்ஸ்டபிளால் சில இடங்களில், கமிஷனரையும் தாண்டி இத்தனையும் செய்ய முடியுமா...? என லாஜிக் பார்க்காமல் காக்கி சட்டையை பார்த்துவிட்டு வந்தால் காக்கி சட்டை - கமர்ஷியல் சட்டை!

Post a Comment

 
Top