0
போட்ட மொத்த பணமும் ‘மண்ணா போச்சு’ என்று தயாரிப்பாளர் புலம்பப்போவதில்லை. ஏன்? சில ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து துபாய்க்கு டூர் போவதும் ஒன்று. வெறும் நூறு ரூபாய் செலவில் இந்த படத்தை பார்ப்பதும் ஒன்று. படம் முழுக்க துபாயின் இண்டு இடுக்கெல்லாம் காட்டி, இன்புற வைக்கிறார் ஒருதலைராகம் சங்கர். படத்தின் இயக்குனரும் இவரே. தமிழில் அவர் இயக்கும் முதல் படம். இங்கிருப்போர் வழக்கப்படி ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு ஃபைட் என்று நேரத்தை மொக்கை போடாமல் நேரடியாக கதைக்கு வருகிறார். அதை போரடிக்காமல் சொல்லியும் முடிக்கிறார். இவருடன் கூடவே பயணித்து ஆஹா போட வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஸ்ரீதருக்கும் ஒரு ஷொட்டு!

துபாய்… நான்கு நண்பர்கள் ஒரு அறையில் தங்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் தனித்தனியாக வேலை. ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப கதை. நல்லவேளை… இந்த குடும்ப கதை விசு, வீ.சேகர் பாணியில் இல்லாமலிருந்ததே, அதுவே பெரிய ஆறுதல்! இவர்களில் பிரஜன் தனிஷ்காவை காதலிக்கிறார். ஆனால் தனிஷ்கா வெயிட்டராக வேலை பார்க்கும் அதே ஓட்டலின் முதலாளிக்கு அவர் மீது ஒரு கண். ஓராயிரம் கண். சந்தர்ப்பம் அமையவும், பழம் தானாக விழவும் காத்திருக்கிறார். ஆனால் தனிஷ்காவுக்கும் பிரஜனுக்கும் லவ் ஸ்டிராங்காகிக் கொண்டிப்பதை அறிந்து கொள்ளை கோபம் அடைகிற நேரத்தில்தான் அந்த திருப்பம். சொந்த ஊரில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட தனிஷ்கா, அதை அடைக்கதான் துபாய் வந்திருக்கிறார் என்பதும், சம்பந்தப்பட்ட கடன்காரரே தனிஷ்காவை துபாயில் கண்டுபிடித்துவிட்டார் என்பதும் தெரிந்தால் சும்மாயிருப்பாரா? ஒரு வாரத்தில் ஐம்பது லட்சத்தை எண்ணி வை என்று நெருக்குகிறார்கள் இருவரும். இல்லேன்னா என்னோட அட்ஜஸ்ட் பண்ணு. நான் தர்றேன் அந்த ஐம்பதை என்பது அந்த ஓட்டல் முதலாளியின் டீலிங்.

அப்புறம் என்னாச்சு என்பது ஒரு கதையாகவும், ஒரு பெரிய ஓட்டலின் முதலாளியான சங்கரின் மகளுக்கும் ஒரு பாடகருக்கும் ஏற்படும் காதல் இன்னொரு கதையாகவும் நகர்க்கிறது. எல்லாரும் சேர்ந்து யாரை முடித்தார்கள். யாரோடு சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

வெறும் துபாயை மட்டும் கண்குளிர காட்டிவிடவில்லை சங்கர். அந்த நாட்டு சட்ட திட்டங்களையும் ஒழுங்கையும் கூட காண்பிக்கிறார். துபாய் போலீஸ் ஸ்டேஷன், அந்த நாட்டு கோர்ட், நீதிமன்றமே ஒரு தீர்ப்பு சொன்னால் கூட, அதை தாண்டி தண்டனையிலிருந்து விடுபடவும் ஒரு வழி இருக்கிறதே அது என்ன? என்றெல்லாம் விலவாரியாக காண்பித்து வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

படத்தில் நடிக்கும் மற்றவர்களை விடுங்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் அந்த இரண்டு புதுமுகங்களும் வரைஞ்சு வச்ச சித்திரம் போல நச்சென்று இருக்கிறார்கள். அதிலும் அந்த இரண்டாவது நாயகியான வருணா ஷெட்டி, அவ்வளவு பெரிய ஓட்டலின் முதலாளி என்பதை அவரது ஒவ்வொரு சென்ட்டிமீட்டரும் பளபளவென சொல்கிறது. இந்த காதல்களில் எங்கும் ஆபாசம் இல்லாமல் அருவருப்பு இல்லாமல் பிரசன்ட் பண்ணியிருக்கிறார் சங்கர்.

ஒரு கண்டிப்பான அப்பா, அதே நேரத்தில் தன் மகளின் காதல் விஷயத்தில் ஆ.. ஊ.. என்று கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்யாமல் ஜென்ட்டிலாக நடந்து கொள்கிற விஷயத்திலும் சங்கர் ஆஹா. வெறும் மணல் நகரம் என்று தலைப்பில் மட்டும் சொல்லாமல், டெசர்ட் என்று சொல்லப்படும் பாலை வனத்தையும், அங்கு நடக்கும் சேசிங் துரத்தல்களையும் காட்டி மிரட்டியிருக்கிறார் சங்கர்.

இசை ரினில் கவுதம். தொழில் நுட்பத்தில் யார் ஹீரோ? இசையமைப்பாளரா, ஒளிப்பதிவாளரா என்றால், சந்தேகமேயில்லை. ஒளிப்பதிவாளர்தான்.

சங்கர் யாரையும் கீழே தள்ளவில்லை, ஆனால் எல்லார் மீசையிலும் மணல்!

Post a Comment

 
Top