0
ஒரு ரெஸ்டாரென்ட்டில் சுட்ட கோழி பார்சல் ஆர்டர் கொடுத்துவிட்டு காரில் மகனோடு வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த போது சடாரென கார் கதவை திறந்து இரண்டு திருநங்கைகள் காசு கேட்டார்கள். இது வழக்கமாக நடப்பது தான் . ஆனால் எப்போதும் கார் கண்ணாடியை தட்டுவார்கள். இந்த முறை எதிர்பாராத நேரத்தில் கார் கதவை திறந்தவுடன் மிரண்டு போனேன். அவர்களை பார்க்க வைத்துக் கொண்டு பர்ஸை திறக்கவும் யோசனையாக இருந்தது. காசு வாங்காமல் கதவை மூட விடுவதாய் இல்லை. வேறு வழியில்லாமல் பர்ஸை திறந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக்கொண்டு , ஒரு ரூபாய் சில்லறை குடு பையனுக்கு தலைய சுத்தி தரேன் என்றார்கள். அதெல்லாம் வேண்டாம் என மறுத்தும் கேட்கவில்லை. சரி தரேன் கதவை விடுங்க என்று மன்றாடி சாத்திவிட்டு கண்ணாடியை இறக்கி ஒரு ரூபாயை எடுத்து நீட்டினேன்.

பையன் தலையை சுற்றியவுடன், ஒரு ரூபாயை கையில் தருவார் என பார்த்தால், பர்ஸை திறங்க நானே வைக்கிறேன் என்றார்.அதெல்லாம் வேண்டாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என கார் கண்ணாடியை ஏற்ற முயற்சித்தேன். விடவே இல்லை இருவரும். மிரட்ட ஆரம்பித்து விட்டனர். கார் ஹார்ன் அடித்து செக்யூரிட்டியை கூப்பிட்டேன். இவர்கள் இருவருக்கும் பயங்கர கோபம். இருபது ரூபாய் நோட்டை என் மூஞ்சியிலேயே விட்டெறிந்தார்கள்.அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தனர். எனக்கு அதில் புரிந்தது பிச்சைக்காரி என்ற வார்த்தை மட்டுமே. வாழ்க்கையில் இவ்வளவு மோசமான வார்த்தைகளில் யாரிடமும் திட்டு வாங்கியதில்லை. பையன் பயந்து போய் என்னோடு பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான்.

அதற்குள் சத்தம் கேட்டு ஒரு நடுத்தர வயது வடநாட்டு செக்யூரிடி வந்து இருவரையும் விரட்டினார். இருவரின் கோபமும் அவர் மேல் திரும்பியது. அவரை என்னைவிட கேவலமாக திட்ட ஆரம்பித்தனர். கோபத்தில் செக்யூரிட்டியின் ப்ளாஸ்டிக் சேரை தூக்கி விசிறி கார் மேல் போட்டார் ஒரு திருநங்கை. செக்யூரிட்டி இன்னுமே சத்தம் போட ஒரு பெரிய கல்லை தூக்கி அவர் மேல் போட மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் கூட்டம் கூடிவிட்டனர். என்னுடயை காரை எடுக்க முடியாத அளவு கூட்டம். கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசினார்கள் இருவரும்.காருக்குள் தலையை மறைத்த படி கார் கண்ணாடி உடைந்து அடிபட்டு விட போகிறது என்ற பயத்தில் நானும் பையனும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி அமர்ந்திருந்தோம்.

சுற்றியுள்ள கூட்டம் அவர்களிருவரையும் அமைதியாக போகும்படி மிரட்ட ஆரம்பித்தனர். சரியாக இந்நேரம் பார்த்து ஆர்டர் பண்ணித்தொலைத்த சிக்கன் வந்து நின்றது.எனக்கு கார் கண்ணாடியை இறக்க கூட பயம். ஒரு வழியாக சிக்கனை வாங்கியபோது அந்த திருநங்கைகளில் ஒருவர் தனது சூடிதார் பேன்ட் கழண்டு விழுவது கூட தெரியாமல் கத்திக் கொண்டிருந்தார். சுற்றி நின்ற மொத்தக் கூட்டமும் அந்த கூச்சலிலும் இதைப் பார்த்து சிரிக்கத் தவறவில்லை.யாராவது அவரது ஆடையை சரி செய்து விட மாட்டார்களா என்று அங்கலாய்ப்பாக இருந்தது. எவ்வளவு காசு கொடுத்தேன் எவ்வளவு சில்லறை மீதம் வாங்கினேன் எதுவுமே ஞாபகமில்லை. யாரோ ஒரு புண்ணியவான் நீங்க கிளம்புங்க மேடம் கிளம்புங்க மேடம் என்று எப்படியோ வழி ஏற்படுத்தி கொடுத்து கிளம்ப வைத்தார். அந்த செக்யூரிடியின் ரத்தம் வழியும் முகத்தை பார்த்துக் கொண்டே காரை ஓட்டி வந்து விட்டேன். இவ்வளவு களேபரத்திலும் கூச்சலிலும் கூட ஹோட்டலுக்கு உள்ளிருந்து ஒருவரும் எட்டிப்பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்த பின்னும் படபடப்பு அடங்கவே இல்லை. கணவரிடம் நடந்தவற்றை கூறவும் அவர் உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம் என்றார். ஏனோ எனக்கு அதில் விருப்பமில்லை.

வாங்கி வந்த சுட்ட கோழியை தொட கூட இல்லை. இரண்டு நாள் கழித்து அந்த செக்யூரிட்டியை பார்க்கச் சென்றேன். பாவம் எனக்காக சண்டைப் போட்டு அடி வாங்கிக் கொண்டவர். அவர் அந்த சண்டைக்குப் பிறகு வேலைக்கே வரவில்லை என்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

இதை எல்லாம் விட பையன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் சிரமமாக இருந்தது.என்னத்த சொல்ல. இப்போதெல்லாம் காரில் பயணம் செய்யும் போது சென்ட்ரல் லாக் போடுகிறேனோ இல்லயோ சிக்னல், பார்க்கிங் என எங்கு வெய்ட் செய்ய வேண்டி நேர்ந்தாலும் சென்ட்ரல் லாக் போட்டிருக்கிறேனா என உறுதிபடுத்திக் கொள்கிறேன்.

எனக்கு திருநங்கைகளின் மேல் எந்த வித கோபமோ கிண்டலோ எப்போதுமே இருந்ததேயில்லை. பாவம் இவர்கள் என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். இன்னமும் அப்படியே. ஆனால் அதோடு கூட இப்போது கொஞ்சம் பயமும் சேர்ந்துக் கொண்டது வருத்தமான விஷயம்.

Post a Comment

 
Top