0
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் தாமரை.

சீமான் இயக்கிய, இனியவளே என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான தாமரை, கௌதம் மேனனின், மின்னலே படத்துக்கு பாடல் எழுதிய பிறகு பிரபலமானார்.

பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்திய வசீகரா என்ற பாடல் ஹிட்டானது மட்டுமல்ல தாமரைக்கு பட வாய்ப்புகளையும் குவித்தது.

அண்மையில் வெளியான என்னை அறிந்தால் படம் வரை ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் தாமரை.

தமிழ்ப்பற்று கொண்டவரான தாமரை, தமிழ் தேசியத் தலைவர்களில் ஒருவரான தோழர் தியாகு உடன் நெருங்கிப் பழகி பின்னர் அவரையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணமான தியாகு தாமரையைவிட பல வருடங்கள் வயதில் பெரியவர்.

தாமரை – தியாகு தம்பதிக்கு ஒரு மகன் உண்டு.

மனம் ஒத்த தம்பதியாக விளங்கிய தாமரை – தியாகு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே மனைவி உள்ள நிலையில் தாமரையை காதலித்து மணந்தது போலவே, தாமரை இருக்கும்போதே இன்னொரு இளம்பெண்ணை தன் காதல்வலையில் தியாகு சிக்க வைத்திருக்கிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

தன் நண்பர்கள் வட்டாரத்தில் தாமரையே தன் கணவர் பற்றி முறையிட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

தாமரையின் கணவரான தியாகு, சில மாதங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை அருகே உள்ள தோழர் தியாகுவின் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில், தன்னையும் தன்மகனையும் தவிக்க விட்டு சென்று தலைமறைவாக இருக்கும், தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி இருக்கிறார் தாமரை.

தாமரையின் இந்த திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி செய்தியாளர்களை அழைத்த தாமரை,

“மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த்தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014 அன்று வீட்டை விட்டு ஒரு திருடனைப் போல் வெளியேறித் தலைமறைவாகி விட்டார்.
இன்று வரை நான் அவரைக் காணவில்லை.

என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை.

சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த்தேசியத் தலைவன் செய்கிற செயலாக இல்லை இது.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார்.
அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார்.

அதனால் நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை. எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமை தமிழ்த்தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும் அடங்கியிருந்ததும்தான்

2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம். ”

என்பது உட்பட தோழர் தியாகு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் தாமரை, சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறார்.

என்ன கோரிக்கை?

“வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.

நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.

எனக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத் தியாகுவே பொறுப்பு. ”

என்று எச்சரிகை விடுத்திருக்கிறார்.

தாமரைக்கும் அவரது கணவர் தியாகுவுக்கும் இடையிலான பிரச்சனை என்பது அவரது தனிப்பட்ட குடும்பப்பிரச்சனை.

“நான் கனவு கண்ட தமிழ்த்தேசம் அறம், ஒழுக்கம்,நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன்.

இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.

எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ்திராவிடத்தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர் கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள் ? ”

என்றெல்லாம் சொல்லி, தாமரையின் குடும்பத்தகராறை ஏதோ தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனை போலவும்… தமிழர்களின் பிரச்சனை போலவும்… தமிழ் இனத்தின் பிரச்சனை போலவும்… தாமரை சித்தரிக்க முயல்கிறார்.

தன் குடும்பப் பிரச்சனையை காவல்துறை அல்லது நீதிமன்றம் வாயிலாக தீர்த்துக்கொள்வதைவிட்டுவிட்டு அதை பொதுப்பிரச்சனையாக்கி தாமரை பரபரப்பு தேடிக்கொள்வதின் பின்னணி என்ன?

தோழர் தியாகு வாய் திறந்தால் விடை கிடைக்கலாம். 

Post a Comment

 
Top