0
சினிமாவைப் பற்றியும் சினிமாத்துறையைப் பற்றியும் கடந்த காலங்களில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அவற்றில் வெகு சில படங்களே ரசிகர்களை கவர்ந்துள்ளன.

சில வருடங்களுக்கு முன் தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றது.

அப்படத்தின் இயக்குநர் இயக்கிய அடுத்தப் படத்தின் பெயர் ரெண்டாவது படம். பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் மிஷ்கினின் உதவியாளர் கள்ளப்படம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த வரிசையில்.. மசாலாப்படம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

தமிழில் வருகிற எல்லாப்படங்களுமே மசாலாப்படங்கள்தான். இதில் மசாலாப்படம் என்ற பெயரிலேயே ஒரு படமா?

சந்தேகத்தை இயக்குநர் லக்ஷ்மன் குமாரிடம் கேட்டால்…

”மசாலா படம் என்ற தலைப்புக்கு ஏத்த மாதிரி இந்த படத்துல எல்லா சுவையும் அளவோடு கலந்து, குழந்தைகளோடு குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்கிற (ரசிக்கிற) தரமான படமாக இருக்கும்.
இந்த படத்துல தகவல் தொழில்நுட்ப காதலர்களான இன்றைய இளைஞர், இளைஞிகளின் சமூக சிந்தனையையும், சினிமாவையும் அதன் ஆயிரம் அணுகுண்டுகளுக்கு இணையான சக்தியையும், குற்றம் மட்டுமே கண்டுபிடித்து லைக் வாங்கும் நவீன கால நக்கீரர்களையும் சிந்திக்க வைக்கும் ஒரு சரியான திரைப்படமாக இருக்கும்.”

என்று புரியாமல் பதில் சொல்கிறார்.

அவர் சொல்வதை தமிழில் சொல்ல வேண்டும் என்றால்…

திரைப்படங்களை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கண்டபடி விமர்சிக்கிறார்கள். வேறு சிலரோ… சினிமாவை கழுவி ஊற்றி அதை யூடியூபில் ஏற்றிவிடுகிறார்கள். அதனால் படங்களின் வெற்றி பறி போகிறதாம். அப்படிப்பட்ட ஆட்களை லெப்ட் ரைட் வாங்கும் படமாக மசாலாப்படம் இருக்குமாம்.

இயக்குனர் லட்சுமணன் யார் தெரியுமா?

வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு செய்து மசாலாப்படத்தை இயக்கி இருக்கிறார்.

படம் பார்க்கும் ரசிகர்களின் கோணத்தில், மசாலா படத்தின் கதை சொல்லப்படுகிறதாம்.

மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கவுரவ் ஆகிய மூன்று பேர்களுடன் சில புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ஆச்சார்யா என்ற புதிய இசையமைப்பாளர், இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

விரைவிலேயே தியேட்டர்களில் மசாலாப் படம் மணக்க இருக்கிறது.

மசாலாப்படம் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ஆச்சி மசாலாவை ஸ்பான்ஸர் ஆக்கி இருக்கிறார்கள்

Post a Comment

 
Top