0
காக்கி சட்டை விமர்சனம். இனிமேல் சிவகார்த்திகேயன் காமெடி படம் மட்டுமல்ல ஆக்க்ஷன் படங்களையும் தாராளமாக பண்ணலாம்…

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து அதே டீம் மீண்டும் இணைந்திருக்கும் படம். இத்தனை நாளும் காமெடி ஹீரோவாக வலம் வந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. அந்த எதிர்பார்ப்பை காக்கி சட்டை டீம் எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்…

மதிமாறன் (சிவகார்த்திகேயன்) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு சாதாரண காவலராக பணியில் இருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் குடும்பத்திற்கு இவர் செய்யும் உதவியினால் ஸ்ரீதிவ்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. அதுவே பின்னாளில் காதலாக மாறுகிறது. சாதாரண காவலராக இருந்தாலும் கடமைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் மதிமாறன். ஆனால், காவல் நிலையத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. இதனால் காவல்துறை ஆய்வாளரான பிரபுவிடம் ஆத்திரப்படுகிறார் மதிமாறன். ‘தொட்டாலே ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ் புடிச்சிட்டு வா…. அப்புறம் நான் நடவடிக்கை எடுக்கலைன்னா… சொல்லு…” என்கிறார் பிரபு. அதே நேரத்தில் பிரபல மருத்துவமனையில் உடலுறுப்பு திருட்டு நடப்பது பற்றி மதிமாறனுக்கு தெரிய வருகிறது. அதை வழக்காக மாற்ற முயற்சிக்க சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கிற ஷாக்கை மதிமாறன் எதிர் கொண்டு அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பது படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியை செம ஜாலியாக நகர்த்தியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவுக்காக லோலோவென அலையும் காட்சிகள்தான் பெரும்பாலானவை என்றாலும் அவற்றை ரொம்பவே ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டாவது பாதி ஆக்க்ஷன் கொஞ்சம் சீரியஸ் கலந்து வருகிறது. மனோபாலா காமெடி நிறைய நேரத்தை ஆக்ரமித்துக் கொள்வதால் இரண்டாவது பாதி சற்றே நீளமாக இருக்கிறது.

படத்துக்கு படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் தன்னை மெருகேற்றி வருவதை இந்தப் படத்தின் காட்சிகளும் நிரூபிக்கின்றன. படத்தின் முதல் காட்சியிலேயே சிவகார்த்திகேயனை சீரியஸ் போலீசாக காட்டி அடுத்த காட்சியில் சிரிப்பு போலீசாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. போலீஸ் கேரக்டரில் இருந்தாலும் காமெடி பண்ண தவறவில்லை சிவா. ஸ்ரீதிவ்யாவை வில்லனின் அடியாட்கள் கடத்திச் செல்லும் காட்சியில் ஆக்க்ஷனில் என்ட்ரி கொடுக்கிறார். சிவகார்த்திகேயன் ஆக்க்ஷன் என்ட்ரி கொடுக்க படத்தில் இதைவிட நல்ல காட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சூப்பரான ஆக்க்ஷன் இன்ட்ரோ.

ஸ்ரீ திவ்யா… சிவகார்த்திகேயனே காதலித்தோமா டூயட் பாடினோமா என்றில்லாமல் கதையின் நாயகியாகவும் வருகிறார். செர்வர் ரூமில் நுழைந்து இவர் முக்கிய ஆவணங்களை பென் டிரைவில் எடுக்கும் காட்சி திக்திக். இமான் அண்ணாச்சியை இந்தப் படத்தில் நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சிவகார்த்திகேயன் இமான் அண்ணாச்சி வரும் காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பொலி எதிரொலிக்கிறது. எப்படிப்பட்ட சீரியஸ் வில்லனாக இருந்தாலும் அவர்களிடம் கூட ஒரு டம்மி பீஸ் இருக்கும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. அதையும் இந்தப் படத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். வில்லன் துரைக்கு எடுபிடியாக வருகிறார் மனோபாலா. இவர் வரும் காட்சிகளை கொஞ்சம் ‘கன்ட்ரோல்’ பண்ணியிருக்கலாம். இவர் சமையல்காரியுடன் அடிக்கும் கூத்து கொஞ்சம் கிளுகிளு. காவல் நிலைய ஆய்வாளராக வருகிறார் பிரபு. தகிடுதித்தங்களுக்கு இவரும் துணை போகிறார் என்று நினைத்தால்… இவருடைய உண்மை முகம் வேறாக இருக்கிறது. சால்ட் பெப்பர் ஸ்டைலில் படம் முழுக்க வந்து கலக்குகிறார் ஹிந்தி வில்லன் விஜய் ராஸ். ஹீரோவும் வில்லனும் கட்டிப் புரண்டு சண்டை போடும் எந்த காட்சியும் இல்லாவிட்டாலும் இருவரையும் நன்றாக மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குநர்.

வில்லனின் அடியாள்கள் பத்து 20 பேரை சிவகார்த்தியன் அடித்து துவைப்பது போன்ற காட்சியை வைத்து ரசிகர்களை எரிச்சலடைய வைக்காமல் வெறும் நாலே பேருடன் மோதவிட்டு அவர்களையும் ஒன்றிரண்டு அடிகளிலே மட்டையாக்கியிருப்பதும் இயக்குநர், சண்டை இயக்குநரின் நல்ல டெக்னிக்காக இருக்கிறது.

பின்னணி இசையை கச்சிதமாக செய்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே ரசிக்கிற மாதிரி இருக்கின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவும் நூர் அஸ்வான் எடிட்டிங்கும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. படத்தை இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். ஒரு காமெடி ஹீரோவை ஆக்க்ஷன் ஹீரோவாக்குவது என்பது எளிதான வேலை இல்லை… கொஞ்சம் சொதப்பினாலும் சீரியஸ் போலீஸ் சிரிப்பு போலீஸ் ஆகிடுவாரு. ஆனால் சிவகார்த்திகேயனை சரியான இடத்தில் ஆக்க்ஷன் பண்ண வைத்து சபாஷ் போட வைத்திருக்கிறார் துரை செந்தில்குமார். உடல் உறுப்புகள் திருட்டு, காவலர்களின் கடமை என படம் சில விஷயங்களை கொஞ்சம் ஆழமாகவே பேசுகிறது. இனிமேல் சிவகார்த்திகேயன் காமெடி படம் மட்டுமல்ல ஆக்க்ஷன் படங்களையும் தாராளமாக பண்ணலாம்… என்பதற்கு கோடு இல்லை…. ரோடே போட்டிருக்கிறது காக்கி சட்டை!

Post a Comment

 
Top