0
''ராட்டினம்'' படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில், அவரும் முக்கிய பாத்திரமேற்று நடிக்க வௌிவந்திருக்கும் திரைப்படம், நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா ''புத்தகம்'', ''அமரகாவியம்'' படங்களை தொடர்ந்து நாயகராக நடித்து வந்திருக்கும் திரைப்படம். இவை எல்லாவற்றுக்கும் மேல் பிரபல எழுத்தாளர் நாஞ்சில நாடனின் நாவல் ஒன்றின் தலைப்பையே டைட்டிலாக கொண்டு வௌிவந்திருக்கும் திரைப்படம் என எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் படம் தான் ''எட்டுதிக்கும் மதயானை''

கதைப்படி, போலீஸ் அப்பாவின் பொறுப்பில்லாத பிள்ளை ஹீரோ சத்யா! ஒரு பழிக்குபழி சம்பவத்தில் ஆள் மாறாட்டமாகி, எதிர்பாராமல் சத்யாவின் நேர்மையான போலீஸ் அப்பா பானுசந்தர் போட்டுத்தள்ளப்பட, சத்யாவிற்கு அவரது அப்பாவின் போலீஸ் வேலை கருணை அடிப்படையில் வழங்கப்படுகிறது. டிரையினிங் முடித்து அப்பா வேலை பார்த்த அதே திருநெல்வேலி ஸ்டேஷனில் 'சப்-இன்ஸ்'ஸாக வேலைக்கு சேரும் சத்யா, அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களையும், அதற்கு பின்னணி காரணத்தையும் கண்டுபிடித்து, பழிதீர்ப்பது தான் ''எட்டுதிக்கும் மதயானை'' படத்தின் மொத்த கதையும்! இந்த கதையுடன் நடேசன் எனும் சத்யா, சாரா எனும் ஸ்ரீமுகி இருவரது மதம் தாண்டிய காதலையும் கலந்துகட்டி போலீஸ் அதிகாரிகள், போலி அரசியல்வாதிகளின் ஜாதிபிரியம், அதனால் சமூகத்தில் நிகழும் கொடூரம்... இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் சேர்த்து சொல்லி, ''எட்டுதிக்கும் மதயானை'' படத்தை கர்ஜிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி! என்னதான் எட்டுதிக்கில் இருந்து வரும் யானைகளுக்கும் மதம் பிடித்தாலும் யானை பிளிறத்தானே செய்யும்? அதை பிரமாதமாக செய்திருக்கிறது இப்படமும்! அது கர்ஜனையை எதிர்பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு போதுமா.? என்பதுதான் கேள்விக்குறி!

நடேசன் எனும் நட்டியாக ஹீரோ சத்யா, சுட்டித்தனமாக வயசுக்கே உரிய குறும்புடன் வலம் வரும் காட்சிகளை காட்டிலும் பொறுப்பான போலீஸ் 'இன்ஸ்'ஸாக பொளந்து கட்டியிருக்கிறார். ஒரு த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா... என ஹீரோயினை கிண்டலடிக்கும் காட்சிகளிலும் 'பொம்மை' நண்பர் சாம் ஆண்டர்சனை ''ராசாத்தி... ராசாத்தி...'' என கலாய்ப்பதிலும் பொறுமையை சோதித்தாலும், ''நாம கல்யாணத்துக்கு அப்புறம் எந்த சாமியை கும்பிடுவது? என கேட்கும் நாயகியிடம் உன் சாமியை நீ கும்பிடு... என் சாமியை நான் கும்பிடுகிறேன்...?'' எனக்கூறும் இடத்தில் உயர்ந்து நிற்கிறார். கூடவே இயக்குநர் தங்கசாமியும் உயர, தியேட்டரில் 2 பேரும் டைரக்டர் தங்கசாமியை கும்பிடுங்க... என்ற குரல்களும் உயருவது, 2வது படத்திலேயே இயக்குநர் தங்கசாமிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே தெரிகிறது. வாழ்த்துக்கள்!

சாராவாக வரும் நாயகி ஸ்ரீமுகி, பக்கத்து வீட்டு பெண்ணு லுக்கில் இருந்து கொண்டு, லோக்கல் சேனல் தொகுப்பாளினியாக 'கிக்'காக வந்து 'வாவ்' சொல்ல வைக்கும்படி நடித்திருக்கிறார். அவரது குடும்பம் தங்கள் வீட்டுக்கு வந்து செய்யும் பிரேயருக்கு பின், அப்பா பானு சந்தரை இழக்கும் ஹீரோ, சத்யா, போலீஸ் வேலை கிடைத்தபின் அடிப்பட்ட ஒருவருக்கு பிரேயர் செய்ய சாராவை அழைப்பது அபத்தமாக இருக்கிறது.

ராட்டினம் ஹீரோ லகுபரன் மீது இயக்குநருக்கு என்ன கோபமோ.? இதில் என்னதான் கதைக்கான மெயின் கேரக்டர் பிரபா எனும் லகுபரன் என்றாலும், படத்தில் சைடு கேரக்டரில் வந்து சாகடிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.

சாம் ஆண்டர்சன் பொம்மையாக வருகிறார், பொன்மாணிக்கவேல், பானுசந்தர் உருக்கம். மதுரை பாலா, சீனுவாசன், ராஜ்குமார், சீமோர் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோருடன் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமியும், வித்தியாசமும், விறுவிறுப்பான ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்து பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

மனு ரமேசின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சில இடங்களில் கூடியும், சில இடங்களில் கூடாமலும், ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது.

ஆர்.ஜே.ஜெய்யின் ஔிப்பதிவு, தீபக் துவாரக்நாத்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், கே.எஸ்.தங்கசாமியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், ''எட்டுதிக்கும் மதயானை'' ஒருசில குறைகள் இருந்தாலும், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாகவே அதிர செய்திருக்கிறது!

மொத்தத்தில், வழிகாட்டிகளே வழிமாறி போனால் சாமானியர்கள் என்ன செய்வார்கள்.?! எனும் கிளைமாக்ஸ் கேள்வியில் ஜாதிக்காரன், பணம் படைத்தவன்... என பாகுபாடு பார்த்து பணிபுரியும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கும் ''எட்டுதிக்கும் மதயானை'' - ''முரசு கொட்டி முழங்க முயன்றிருக்கிறது!''

Post a Comment

 
Top