0
ஐபிஎல் சூதாட்டம் முறைகேட்டுக்காக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக ஸ்ரீசாந்த் சகோதரியின் கணவரும், பின்னணி பாடகருமான மது பாலகிருஷ்ணன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஐபிஎல் சீசனின்போது, ஸ்ரீசாந்த், சூதாட்ட தரகர்கள் சொன்னதற்கு ஏற்ப பந்தை 'போட்டு கொடுத்ததாக' குற்றச்சாட்டு எழுந்தது. இதில் உண்மை இருப்பதை விசாரணையின் மூலம் அறிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதித்தது.

மேலும், சூதாட்ட புகார் தொடர்பாக, ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சிறைக்குள் வைத்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, மலையாள பத்திரிகை ஒன்றில் இன்று ஸ்ரீசாந்த் மைத்துனரும், பின்னணி பாடகருமான மது பாலகிருஷ்ணன் அளித்த பேட்டிவெளியாகியுள்ளது.அதில் இத்தகவலை அவர் கூறியுள்ளார்.

மது பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், "இரும்பில் உருவான கூரிய ஆயுதத்தால், சிறைக்குள் ஒரு ரவுடி ஸ்ரீசாந்த்தை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதிருஷ்டவசமாக ஸ்ரீசாந்த் உயிரோடு தப்பினார். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு அளித்த புகாரின்பேரில், வேறு சிறைக்கு அந்த ரவுடி மாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான உண்மைகளை மறைக்க நடந்த கொலை முயற்சியா என்பது குறித்தோ, அல்லது அந்த ரவுடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றியோ எங்களுக்கு இதுவரை எதுவும் தெரியாது" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பேட்டி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில், ஸ்ரீசாந்த்தும் இடம்பிடித்த பெருமைக்கு சொந்தக்காரர். கூடவே சர்ச்சைகளும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top