0
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மகள் கீர்த்தனா (வயது 21). அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் இருந்து 300 பேருடன் கேரளாவுக்கு சுற்றுலா புறப்பட்டார்.

சுற்றுலா முடிந்து நேற்று மாலை கேரளாவில் இருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மீண்டும் சேலத்துக்கு புறப்பட்டனர்.


பஸ் இன்று அதிகாலை கோவை எல்லை கே.ஜி.சாவடி அருகே வந்த போது கீர்த்தனா வயிற்று வலியால் துடித்தார். உடன் வந்த பேராசிரியை கீர்த்தனாவுக்கு மாதவிடாய் கோளாறு என்று நினைத்து பஸ்சை கே.ஜி. சாவடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்தும் படி டிரைவரிடம் கூறினார்.


அதன்படி பஸ் டிரைவரும் பஸ்சை பெட்ரோல் பங்க்கில் கொண்டு சென்று நிறுத்தினார்.

மாணவி கீர்த்தனா பெட்ரோல் பங்க்கில் உள்ள கழிவறைக்கு சென்றார். சில நிமிடங்களில் அவருடைய அலறல் சத்தம் பயங்கரமாக கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் அங்கு சென்றனர்.

கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்தனர். உள்ளே ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா மயங்கி கிடந்தார்.


அவர் அருகே பிறந்த பெண் குழந்தை இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பேராசிரியைகள் கீர்த்தனாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் இறந்து கிடந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


குழந்தை பெற்ற கீர்த்தனாவுக்கு திருமணமாகவில்லை. அவரது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று போலீசார் மாணவியிடம் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்ததும் அவரது பெற்றோர் சேலத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top